கிளிநொச்சியில் பெண்களிற்கு ஆபத்து: வேழமாலிகிதன் தவிசாளராகிறார்!

கரைச்சி பிரதேசசபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தவிசாளராக பிரேரிக்கப்பட்டுள்ள அ.வேழமாலிகிதன் பொருத்தமற்றவர் என்ற விமர்சனம் பரவலாக கிளம்பியுள்ளது. ஊழல் மற்றும் பாலியல் குற்றங்கள் பல சுமத்தப்பட்டுள்ள மேற்படி நபரை தவிசாளராக்கினால், கரைச்சி பிரதேசசபையே நாறிவிடும் என பரவலாக அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது.

35 உறுப்பினர்களை கொண்ட கரைச்சி பிரதேசசபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 17 பேர் தெரிவாகியுள்ளனர். சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு 11 உறுப்பினர்களையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சு.க தலா 2 உறுப்பினர்களையும், ஈ.பி.டி.பி, த.வி.கூ மற்றும் ஐ.தே.க தலா 1 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

கிளிநொச்சி எம்.பி சிறிதரனின் உதவியாளராக இருப்பவர் வேழமாலிகிதன். அவரை தவிசாளராக்க சிறிதரன் எம்.பி விடாப்பிடியாக செயற்படுகிறார். எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களிற்கு வேழமாலிகிதன் தவிசாளராவதில் உடன்பாடில்லை. கடந்தகாலத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் பலவற்றிற்கு உள்ளான இவரை தவிசாளராக்குவது கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்குமென அவர்கள் கூறுகிறார்கள்.

எனினும், அதையும் மீறி வேழமாலிகிதனை தவிசாளராக்க சிறிதரன் முயற்சிப்பதால், சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான அமைப்புடன் அவர்கள் இரகசிய பேச்சு நடத்தி வருகிறார்கள். வேழமாலிகிதன் தவிசாளராவதை விட மற்ற கட்சிகள் கூட்டாக ஆட்சியமைப்பது சிறந்தது என்ற அபிப்பிராயம் உறுப்பினர்களிடமும், அந்த பகுதி மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களிற்கு முன்னர், வெளிநாட்டில் உள்ள தனது கணவனின் அகதி அந்தஸ்து கோரிக்கைக்காக சிறிதரன் எம்.பியிடம் சிபாரிசு கடிதம் பெறவந்த பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் பெற முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அது தவிர, வேறும் பல பாலியல் குற்றச்சாட்டுக்களும், மோசடி குற்றச்சாட்டுக்களும் அவர்மீது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை திங்கட்கிழமை கரைச்சி பிரதேசசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நடக்கவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here