ஐ.எஸ் அமைப்பை வேரறுத்த போர்த்தந்திரர்: யாரிந்த காசிம் சுலைமான்?

பாக்தாத்தில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஈரான் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் காசிம் சுலைமான் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அதிகாரி, ராஜிய அதிகாரி, போர்த்தந்திர கருத்தாளர், உளவு நிபுணர், ஈரானில் ஒரு சூப்பர்ஸ்டாராகக் கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியப் புரட்சியை ஆதரித்த இவர் தலைவர் அயத்துல்லா அலி கொமெனிக்கு நேரடியாக ரிப்போர்ட் செய்யும் அளவுக்கு நெருங்கியவர். ஈரானின் அயல்நாட்டு இராணுவத் தலையீட்டின் சூத்திரதாரியாக விளங்கியவர் காசிம் சுலைமான். குறிப்பாக ஈராக், சிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர்.

இவரை தலைவர் காமெனி, “புரட்சியின் வாழும் தியாகி” என்றே வர்ணித்தார். ஈரானிய புரட்சியாளர்களுக்கு தியாகம் என்பது ஒரு சேவையாகும்.

ஈராக்கில் ஆரம்பம்

புரட்சிக்குப் பிறகு உடனடியாக ஈரான் ராணுவத்தில் இணைந்தவர் சுலைமான், 1980-88ல் நடந்த ஈரான் – ஈராக் போரின் போது இவர்தான் முன்னணியில் நின்று வழிநடத்தினார். இதனால்தான் ஈராக்கில் இவரது கொலைக்கு பெரும் ஆதரவு இப்போது திரண்டுள்ளது. போரின் போது இவரது வீரதீரத்திற்கு கிடைத்த அங்கீகாரம் தான் தனது 20 வயதுகளில் இருந்த சுலைமானை இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்ட்ஸ் படையின் 41வது தரல்லா டிவிஷன் கொமாண்டராக உயர்த்தியது. ஈராக்கிய படைகளுக்கு சன்னி அரசாட்சியின் ஆதரவும், மேற்குலகின் ஆதரவும் இருந்தது. இதனால் ஈராக்கிற்கு போரில் பெரிய அளவில் அதன் கை ஓங்கியது, ஆனால் தற்கொலைப் படைகள் மூலம் ஈராக் படைகளுக்கு அதிர்ச்சி மருத்துவம் அளித்தார் சுலைமான்.

1988ல் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு சதாம் ஹுசைன் மற்றும் அவரது வளைகுடாக் கூட்டணிகள் ஈரானில் ஆதிக்கத்திலிருந்த முல்லாக்களை ஒழிக்க நினைத்தார். முல்லாக்கள் ஆதிக்கம் டெஹ்ரானில் அப்போது நிலவியது. சுலைமானுக்கு அவரது போர் வீரதீரங்களுக்காக பெரிய விருதுகள் அளிக்கப்பட்டன. 1990ல் ஐஆர்ஜிசியின் கெர்மன் மாகாண கொமாண்டராக பதவி உயர்வு பெற்றார் சுலைமான்.

போரின் போது ‘முன்னணித் தடுப்பு வியூகம்’ என்ற போர்த்தந்திரத்தை ஈரான் வளர்த்தெடுத்திருந்தது. ஒரு பாரம்பரிய இராணுவ சக்தியாக ஈரான் தங்களது வரம்புகளை குறைநிறைகளை அறிந்திருந்தது. அயல்நாடுகளில் தங்கள் படைகளுக்கு இருக்கும் பலவீனங்களையும் அறிந்திருந்ததால், ஷியா முஸ்லிம்களை திரட்டி பெரிய வலைப்பின்னலை உருவாக்கியது. இவர் கடைசியாக கொமாண்டராக இருந்த குட்ஸ் படை, ஐஆர்ஜிசியின் அயல்நாட்டுக் கிளையாகும். இதன் முக்கிய வேலையே படைகளின் வலைப்பின்னல்களை உருவாக்குவதுதான்.

1980களில் லெபனானில் ஹிஸ்புல்லாவை உருவாக்கியது ஈரான். இது அமெரிக்காவையும் இஸ்ரேலையும் குறிவைத்து பெரிய பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே போல் ஈராக் ஷியாக்களுடன் ஈரான் தங்கள் பிணைப்புகளை மேற்கொண்டது. 1998ம் ஆண்டு குட்ஸ் படையின் தலைவராக சுலைமான் நியமிக்கப்பட்ட சமயங்களில் ஈரான் பெரிய தடுப்பு வலைப்பின்னல்களை உருவாக்கியது. சுலைமானின் பணி இதனை புதிய தளங்களுக்கு எடுத்துச் செல்வதாக அமைந்தது. சுலைமான் இதைத்தான் செய்தார்.

சமீப காலங்களில் ஈராக், சிரியாவில் ஈரான் தன் தாக்கத்தை விரிவாக்கம் செய்த போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் விழத் தொடங்கியது. சுலைமான் மீது அதிக கவனக்குவிப்பு நிகழ்ந்தது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு நேரடியாக அவர் கடிதம் எழுதி மிரட்டியவர். அதாவது ட்ரம்புக்கு இவர் கூறியது ஈரானில் புகழ்வாய்ந்தது, ’உங்களுடன் எங்கள் நாட்டு ஜனாதிபதியெல்லாம் பேச மாட்டார். நான் ஒரு இராணுவ வீரன். நான் தான் பேசுவேன்’ என்று கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்ப்பியோ ஜூலை 2019ல் சுலைமானை மிரட்ட பிற சக்திகளைத் திரட்டியபோது, ஐ.ஆர்.ஜி.சி என்ன கூறியது தெரியுமா? -’சுலைமான் தனி நபர் அல்ல, அவர் பின்னால் ஈரானே உள்ளது’ என்று பதிலளித்தது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒழித்ததில் முக்கிய போர்த்தந்திரர் சுலைமான்:

தன்னுடைய பதவிக்காலத்தின் இறுதிக் கட்டங்களில் அமெரிக்க அச்சுறுத்தலுடன் சிரியாவின் சிவில் யுத்தம் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் எழுச்சி ஆகியவையின் அச்சுறுத்தல்களும் சேர 2011-13- காலக்கட்டங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் படைகள் சிரியாவின் சில பகுதிகளை இழக்கத் தொடங்கியது. ஈரானின் ஒரே தேசிய கூட்டாளி பஷார்தான். லெபனானின் ஹிஸ்புல்லாக்களை ஈரானுடன் தொடர்பு படுத்துவதும் சிரியாதான். அதனால் பஷார் அசாத் வீழ்ச்சியடைந்தால் அதனால் டெஹ்ரான் கடுமையாகப் பலவீனமடையும். இது நிகழாமல் தடுப்பதுதான் சுலைமானின் முக்கியப் பணியாக இருந்தது.

இவர் ஒருமுறை ஈராக் அரசியல்வாதி ஒருவரிடம், “ஈராக் ராணுவம் பயனற்றது” என்று கூறினார். ஷியா போராளிகளை பயிற்சி அளித்து சிரியாவுக்கு அனுப்பி ஐஎஸ்-ஐ ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே சுலைமானின் திட்டம்.

ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுடன் இதற்காகக் கூட்டிணைந்து ஐஎஸ்-ஐ ஒழித்துக் கட்டுவதற்கான திட்டமிடலுக்கான காய்களை நகர்த்தினார். இதன் பெரிய வெற்றிதான் 2013-ல் சிரியா-லெபனான் எல்லையில் உள்ள நகரமான ஐஎஸ் பிடியிலிருந்த குசைர் என்ற நகரை ஷியா போராளிகளை வைத்து பிடித்ததாகும்.

சிவில் யுத்தத்தில் சிரிய ஜனாதிபதி அசாத்தின் முதல் வெற்றி இதுவாகும். 2015ல் ரஷ்யாவின் தலையீடு இந்த பிரச்சினையை தலைகீழாக மாற்றினாலும் சிரியா ஜனாதிபதி அசாத்துக்கு அடிப்படை ஆதரவு ஈரானிடமிருந்துதான் வந்து கொண்டிருந்தது, சுலைமான் இந்த அனைத்து நடவடிக்கைகளின் மிகப்பெரிய சூத்ரதாரி என்றால் மிகையாகாது. சிரியாதான் அவரது போர்.

ஐஎஸ்-க்கு எதிரான போரின் போது ஈராக்கிலும் இதே போன்ற ஒரு உத்தியைக் கடைபிடித்தார் சுலைமான். ஈரானால் பயிற்சியளிக்கப்பட்ட படைகள்தான் ஐஎஸ்-க்கு பெரிய அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டிருந்தது. இந்தப் போர்ப்படை மீதுதான் அமெரிக்கா கடந்த மாதம் தாக்குதல் நடத்தி இப்போதைய நெருக்கடிக்குக் காரணமாகத் திகழ்ந்தது. இந்தப் படைதான் ஐஎஸ்க்கு எதிரான போரில் முன்னணியில் நின்று போராடியது, சண்டையிட்டது.

குர்திஷ் பெஷ்மர்கா போராளிகள், ஈராக் இராணுவம் ஆகியவற்றுடன் இணைந்து சுலைமான் உருவாக்கிய படைகள் ஐஎஸ்-ஐ எதிர்கொண்டன. அமெரிக்கா வான்வழி உதவி செய்தது. இதே போர்முறை ஈராக்-ஈரான் எல்லையில் உள்ள ஐஎஸ் பிடியிலிருந்த அமிர்லியிலும் முயற்சி செய்யப்பட்டது. இங்கு பெரும்பாலும் ஷியாக்கள் உள்ளனர். 2014-ல் ஷியா போராளிகள் உதவியுடன் ஈராக் இராணுவம் அமிர்லியை முற்றுகையிட்டு கைப்பற்றியது. இது ஐஎஸ்-க்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாக அப்போது கருதப்பட்டது. இதன் சூத்ரதாரியும் சுலைமான் தான். இதே போர்முறைதான் திக்ரித், ஃபல்லுஜா, ரமாடி, இறுதியாக ஐஎஸ்-ன் கோட்டையான மொசூல் ஆகியவற்றில் கடைபிடிக்கப்பட்டது.

தற்போது ஐஎஸ் அழிக்கப்பட்டுள்ளது. சிரிய அரசு சிவில் யுத்த அச்சுறுத்தலை சுலைமான் – ஈரான் மற்றும் பிற உதவியுடன் எதிர்கொண்டு மீண்டது. ஆனால் இந்த ஒட்டுமொத்த ஐஎஸ் அழிப்பு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து மிகப்பெரிய சூத்ரதாரியாக விளங்கிய அந்த சுலைமானைத்தான் இப்போது அமெரிக்கா கொன்றுள்ளது. இதனை ஈரான் சாமானியமாக எடுத்துக் கொள்ளாது. மிகப்பெரிய ஒரு போராட்டச் சூழலுக்கு இது வழிவகுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here