சாவகச்சேரி பொலிசாரின் பொறுப்பற்ற வேலை!

தவணைப்பரீட்சையில் குறைவான புள்ளிகளை பெற்றதால், பெற்றோரிற்கு அஞ்சி வீட்டைவிட்டு ஓடிவந்த மாணவனை பத்திரமாக பொலிஸ் நிலையத்தில் சேர்க்க முயன்ற இ.போ.ச சாரதியையும், நடத்துனரையும் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் அநாகரிகமாக நடத்தியுள்ளனர்.  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது.

யாழ் பிரதான பேரூந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 5.30 அளவில் கொழும்பிற்கு பேரூந்து புறப்பட்டது. காரைநகர் சாலைக்கு சொந்தமான இந்த பேரூந்தில் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனும் தனியாக பயணித்துள்ளான். நாவற்குழிக்கு அண்மையாக பேரூந்து சென்றபோது, பயணச்சிட்டை வழங்கிய நடத்துனர்- சிறுவனின் பயணச்சிட்டையை யார் எடுத்தார்கள் என வினாவினார். தனியாக கொழும்பு செல்வதாக சிறவன் கூறினான். தவணைப்பரீட்சையில் குறைந்த மதிப்பெண்ணை பெற்றதால் பெற்றோர் தண்டிப்பார்கள் என அஞ்சி வீட்டை விட்டு ஓடிவந்ததாக கூறினான். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து, அங்கிருந்து கொழும்பு புறப்பட்டுள்ளான்.

இதையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பேரூந்தை நிறுத்தி, சிறுவனை அங்கு ஒப்படைத்தனர். நடத்துனரும், சாரதியும் அங்கிருந்து செல்ல முயன்றபோது, பொலிசார் அவர்களை தடுத்து, அவர்களையும் விளக்கமறியலில் வைக்கப்போவதாகவும், திங்கள் கிழமை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற பின்னரே விடுவிக்கலாமென்றும் கூறினர்.

பேரூந்தில் பயணிகள் இருப்பதை குறிப்பிட்டு, தாம் செல்ல வேண்டுமென அவர்கள் கூறியபோது, கடமையிலிருந்த அதிகாரி அநாகரிகமாக நடந்து, சாரதியையும் நடத்துனரையும் கைது செய்ய போவதாக மிரட்டினர்.

இதையடுத்து பேரூந்திலிருந்து இறங்கிய மக்களும் பொலிசாருடன் தர்க்கப்பட்டனர். அவர்களையும் பொலிசார் மிரட்டியுள்ளனர்.

சுமார் 45 நிமிடங்கள் சாரதி, நடத்துனரை துருவிதுருவி விசாரித்த பொலிசார், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி, இருவரையும் விடுவித்தனர்.

வீட்டைவிட்டு தப்பிவந்த சிறுவனை பத்திரமாக பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்ற பொறுப்பான சாரதிக்கும், நடத்துனருக்கும் நடந்த இந்த கதி, இனி உதவி செய்ய யாரையும் அச்சமடைய வைக்குமல்லவா?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here