வாய்ப்பை தாருங்கள்… மலையக விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறேன்!

மலையக மக்கள் ஏனைய சமூகத்தினரை விட சளைத்தவர்கள் அல்லர். வறுமை அவர்களின் முயற்சிகளிற்கு தடையாக இருந்து வந்த போதும், அதனையும் தாண்டி அனைத்து துறைகளிலும் சாதித்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிலர் சாதித்துவிட்டு அவர்களுக்கான உரிய அங்கீகாரமும் கனவை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல போதிய உதவிகளும் வழிகாட்டல்களும் இல்லாமம் முடங்கி கிடக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவரான மலையகத்தில் முதல் முதலில் பதக்கம் வென்ற மெய்யப்பன் மனோகரன் அவர்களை அவரது வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து.

இதன் போது மனோகரன் அவர்களிடம் உங்களது சாதனை தொடர்பில் கருத்து கூறுமாறு கேட்ட போது,

மெய்யப்பன் மனோகரனாகிய நான் நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்லியனாட் தோட்டத்தில் 1970.05.10 இல் பிறந்தேன். தந்தை மெய்யப்பன். தாய் அழகாய். பிறந்து நான்கு வயதில் எனது கால் போலியோ போன்று ஏற்பட்டு இடது கால் ஊனமாகியிருந்தது. ஒரு வருடமாக இவ்வாறு ஏற்ப்பட்டு இருந்தது. அதன் பின் சென்வியனாட்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தேன்.

அப் பாடசாலையில் நடைப்பெற்ற விளையாட்டுப் போட்டியில் அஞ்சல் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதோடு சன் இல்லத் தலைவராகவும் செயற்ப்பட்டேன். அதன் பின்னர் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் கல்வி கற்கச் சென்றேன். அங்கும் இல்ல விளையாட்டுப் போட்டிகளில கலந்து மரதன் மற்றும் 3000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் திறமையை காட்டி வந்தேன்.

தொடர்ந்தும் பாடசாலையை விட்டு விலகி “Lucky Aras” விளையாட்டு கழகத்தில் இணைந்து நான் 1989 இல் நுவரெலியா வலப்பனை மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கு பற்றினேன். அவ்வருடமே தேசிய மட்டப் போட்டிக்கு போய் 100 போட்டியாளர்களுடன் ஓடி 34ம் இடத்தைப் பெற்றேன்.

அவ்வருடமே குடும்ப சூழ்நிலை காரணமாக தோட்டத்தில் பெயர் பதிந்து தோட்டத்தொழிலாளியாக சகல வேலைகளையும் செய்தேன். அப்போதும் 1500 மீட்டர், 5000 மீட்டர், 10000 மீட்டர் ஆகியவற்றில் கலந்து கொண்டு வந்தேன். எனது அப்பா மணல் அகழும் தொழிலில் ஈடுபட்டு வந்தார் அப்போது அவருக்கு உதவும் முகமாக ஓடி ஓடி உதவி செய்வேன் அதுவே என்னை ஒரு ஒட்ட வீரராக மாற்றியது.

1993ம் ஆண்டு இராகலை இளைஞர் கழகத்தை வளர்க்கும் நோக்கத்தில் அவ்வாண்டு நடைப்பெற்ற தேசிய மரதன் ஓட்டப் போட்டியில் ஓடி 2ம் இடம் பெற்றதோடு 10000 மீட்டர் போட்டியில் முதலிடம் பெற்றேன். தொடர்ந்து மத்திய மாகாண ரீதியாக நடைப்பெற்ற போட்டிகளில் பங்கு பற்றி 3 முறை மரதன் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றதோடு, 5000 மீட்டர் 10000 மீட்டர் போட்டிகளிலும் கலந்து கொண்டேன்.

எனது சுயமான முயற்சி ஆர்வம் என்பவற்றின் மூலமே இதுவரை காலமும் பங்குபற்றி வெற்றி பெற்று வந்தேன். எந்த விதமான ஊக்குவிப்போ பயிற்சிகளோ கிடைக்கவில்லை.

தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் மரதன் ஒட்டப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்றுக் கொண்டேன். அம்முறை எட்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தான் எனக்கு திரு.ஆரியரட்ண என்பவர் பயிற்றுவிப்பாளராக கிடைத்தார். அவரின் பயிற்சி மூலமே நேபாளத்தில் கட்மண்டு நகரில் நடைப்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றேன்.

ஓடுவதற்கு ஒரு பாதணி இன்றி நான் ஓடிக்கொண்டிருந்த வேளையில் அப்போதிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க பாதணி ஒன்றை வாங்கித் தந்தார். அதனை அணிந்து நேபாள நாட்டில் ஓடியது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.

அதன் பின்னர் இந்தியாவில் பூனே, சென்னை, பெங்களுர் ஆகிய இடங்களில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டேன். 2001 இல் ஹொங்ஹொங்கில் நடைப்பெற்ற போட்டியில் 7000 போட்டியாளர்களில் 27 ஆம் இடத்தினை பெற்று பதக்கம் பெற்று வந்தேன். தொடர்ந்து மூன்று வருடங்களாக எவ்விதபோட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. சகோதரனின் மறைவு அதே தொடர்ந்து தாயின் மறைவு காரணமாகவும் பங்குபற்றவில்லை. அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு திருமணமாகி 13 ஆம் நாள் தந்தையின் மறைவு குடும்ப சுமை காரணமாக தடைப்பட்டது.

மீண்டும் 2012 இல் வயது வந்தவர்களுக்கான 5000 மீட்டர் போட்டியில் முதலிடம் பெற்று வந்தேன். அவ்வருடம் சீன தாய்பே நகரில் நடைப்பெற்ற ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றேன். 2014ம் ஆண்டில் ஜப்பானில் நடைப்பெற்ற போட்டியில் 4ம் இடத்தையும், 2016 இல் சிங்கப்பூரில் 5000 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வந்தேன். தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு கொள்ள பொருளாதார தடை ஏற்பட்டது.

இலங்கையில் நடைப்பெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்றிருந்த போதும் எனது பொருளாதார நிலை காரணமாக செல்ல முடியவில்லை. தற்போது தேயிலைத் தொழிற்சாலையொன்றில் உத்தியோகத்தராக இருக்கும் நான் பலமுறை மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளராக ஆவதற்கு விண்ணப்பங்கள் அனுப்பியும் எவ்வித பலனும் இல்லை.

ஏதாவது பாடசாலைகளில் பயிற்சியாளராக நியமனம் பெற்றால் என்னால் முடியுமான அளவில் கடினமான உழைப்பை வழங்க முடியும். இந்த நுவரெலியா மாவட்டத்திலோ அல்லது பிற மாவட்டங்களிலோ உள்ள மாணவர்களுக்கு என்னால் பயிற்சியளிக்க முடியுமானால் அதனை பெரும் வரப்பிரசாதமாக ஏற்றுக் கொள்வேன். எனக்கு என் சமூகத்தில் பல்வேறு கஷ்டத்தின் மத்தியிலும் போட்டிகளுக்கு செல்லும் பிள்ளைகளுக்கு நன்கு பயிற்சியளித்து மேலும் மேலும் வெற்றிப் பெற எனது இரத்தத்தை சிந்துவேன் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றேன்.

மேலும் குறிப்பிட்ட சொல்லக்கூடிய ஒரு விடயம், 1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் போது எனக்கு வயிற்றுப் பகுதியில் கல்லடைப்பு ஏற்ப்பட்டு வைத்தியர் ஓட வேண்டாம் என்று கூறிய பின்னரும் அவரது தடையையும் மீறி ஓடியே வெள்ளிப்பதகத்தை எமது நாட்டுக்காக மலையக மண்ணுக்காக பெற்றுக் கொடுத்தேன் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன். என்று கூறினார்.

-பா.திருஞானம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here