புத்தளத்தில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

புத்தளம் கரைத்தீவு சேராக்குளி பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரைத்தீவு சேராக்குளி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான லூசன் புளத்சிங்க (43) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று வீடு திரும்பாததை அடுத்து, இது தொடர்பில் உறவினர்கள் வன்னாத்தவில்லு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, பொதுமக்கள், மீனவர்களின் உதவியுடன் பொலிஸாரும், கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது, குறித்த மீனவர் பயணித்ததாக ௯றப்படும் இயந்திரப் படகொன்று அன்றிரவு (30) மணல்தீவு பகுதியில் கரையொதுங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, காணாமல் போன மீனவரைத் தேடும் நடவடிக்கைகள் குறித்த மணல்தீவு பிரதேசத்தில் தீவிரப்படுத்தப்பட்டன.

இதன்படி, நேற்று முன்தினம் (31) நண்பகல் குறித்த மீனவர் மணல்தீவு கடல்பிரதேசத்தில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

இவ்வாறு பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here