கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவம் வளர்த்தது: அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட சிறுத்தை இராணுவத்தினர் வளர்த்த சிறுத்தையென்பதை தமிழ்பக்கம் உறுதிசெய்துள்ளது. வன ஜீவராசிகள் திணைக்களமும் அதை உறுதிசெய்கின்ற போதும், இது குறித்து இதுவரை தகவலெதையும் வெளியடாமல் மூடிமறைத்து வருகிறது.

எனனும், எந்த இராணுவ முகாமில் அதை வளர்த்தார்கள் என்ற தகவலை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அம்பாள்குளத்தை அண்டிய பிரதேசத்தை சேர்ந்த முகாமொன்றில் வளர்க்கப்பட்டிருக்கலாமென தெரிகிறது.

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

சிறுத்தையின் புகைப்படத்தை பார்த்ததுமே, வன விலங்குகள் மற்றும் வன்னி காடுகள் குறித்த அடிப்படையான அறிவுடையவர்கள் உண்மையை விளங்கி கொள்ளலாம் என்றார். அந்த சிறுத்தை மிக மினுமினுப்பான தோற்றத்தை கொண்டிருந்தது. வன்னி காட்டில் இப்படியான சிறுத்தைகளை காண முடியாது. காரணம்- வன்னிகாட்டின் பரப்பளவிற்குள் அதிகமான சிறுத்தைகள் இருப்பதாகவும், அவற்றின் இரைகள் குறைவாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, புகைப்படத்தை பார்த்ததுமே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிறுத்தையில் சந்தேகமடைந்ததாக குறிப்பிட்டார்.

இதேவேளை, அந்த சிறுத்தை கொல்லப்படுவதற்கு இரண்டு தினங்களிற்கு முன்னர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உத்தியோகபற்றற்ற முறையில் ஒரு தகவல் கிடைத்திருந்தது. இராணுவம் வளர்த்த சிறுத்தையொன்று தப்பிசென்றுவிட்டதென. ஆனால் உத்தியோகபூர்வமாக அது பற்றிய அறிவித்தலை இராணுவம் வழங்கியிருக்கவில்லை.

சிறுத்தை கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களின் முன்னர் அம்பாள்குளம் பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் ஒன்றை நடத்தியிருந்தனர். அதற்கான காரணத்தை கேட்டபோது, முகாமில் வளர்த்த அல்சேசன் நாய் தப்பியோடிவிட்டதென கூறியிருந்தனர்.

சிறுத்தைப்புலி அம்பாள்குளத்தில் அடையாளம் காணப்பட்ட பின்னர், அங்கு சென்று கண்காணித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அறிக்கை மற்றும் சிறுத்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகளும் அந்த கருத்தை வலுப்படுத்துகிறது.

அந்த சிறுத்தைக்கு வேட்டையாட தெரியாதென்பது வனஜீவராசிகள் திணைக்களத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அம்பாள்குளத்தில் அது அடையாளம் காணப்பட்ட ஆறு மணித்தியாலத்தில் அது பசு மற்றும் கன்றுகளின் அருகில் சாதாரணமாக படுத்திருந்திருக்கிறது.

அம்பாள்குளத்தில் சுற்றிவளைக்கப்பட்டதும், அதன் நடத்தை மனிதர்களுடன் இணைந்து வளர்ந்ததென்பதை உறுதிசெய்வதாக சம்பவ இடத்தில் நின்ற வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளிற்கு அறிக்கையிட்டுள்ளனர்.

அந்த சிறுத்தையால் ஏற்பட்ட அதிகபட்ச காயமே ஒருவரின் முதுகில் ஏற்பட்ட சிறிய கீறல்தான். கிட்டத்தட்ட நாய்க்கடியொன்றினளவான பாதிப்பே அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், பெரிய சிறுத்தையொன்றிடம் தனியாக மாட்டியவர் பெரிய சேதத்தை சந்திருப்பார். அவரது தலைப்பகுதியையே சிறுத்தை குறிவைத்திருக்கும். எனினும் அம்பாள்குளத்தில் அப்படியெதுவும் நடக்கவில்லை.

சிறுத்தையை சுற்றிவளைத்து பிரதேசமக்கள் கலவரமூட்டி, அடித்து துன்புறுத்த ஆரம்பித்த பின்னரே எட்டு பேரை நகத்தால் பிறாண்டியுள்ளது.

சிறுத்தையின் பிரேத பரிசோதனையில் அது இரண்டு நாட்களாக உணவெதுவும் உட்கொள்ளவில்லையென்பது உறுதியாகியுள்ளது. அம்பாள்குளத்தில் அதிகாலையில் மாட்டுக்கு பக்கத்தில் நின்றும் அது வேட்டையாடவில்லை. பிரேத பரிசோதனையில் அது வேட்டையாடி வளர்ந்ததாக உறுதிசெய்ய முடியவில்லையென்றும் தெரியவந்துள்ளது.

எனினும், இராணுவத்தின் எந்த முகாமில் வளர்க்கப்பட்டதென்பதை தம்மால் உறுதிசெய்ய முடியவில்லையென்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

சிறுத்தை கொல்லப்பட்ட சமயத்தில், தமிழ்பக்கம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுத்தையின் இணையாக இது இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக. அந்த தகவலையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளே தமிழ்பக்கத்திடம் தந்திருந்தார்கள். அதுகுறித்து, இந்த அதிகாரியிடம் விசாரித்தோம்.

கேப்பாபுலவில் சிறுத்தையொன்று கொல்லப்பட்டதை அவர் உறுதிசெய்தார். அதன் இணை கலவரமடைந்து வந்திருக்கலாமென, சம்பவம் நடந்த அதிகாலையில் தமது திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒரு அபிப்பிராயம் இருந்ததாகவும், எனினும், சிறுத்தையின் புகைப்படம் வெளியானதும் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், அவர் இன்னொரு அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டார். பூநகரிக்கு சமீபமாக, பல்லவராயன்கட்டு காட்டு பகுதியில் மிக அண்மையில் வேட்டைக்காரர்களால் ஒரு பெரிய சிறுத்தைப்புலி கொல்லப்பட்டு, அதன் பற்களும் நகங்களும் எடுக்கப்பட்டுள்ளன என. எனினும், தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லையென்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here