எய்மர் கடாபி- சொல்லியடிக்கும் புலிகளின் தளபதி!

யுத்தத்தின் இறுதி நிமிடங்கள்

கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும்

மினி தொடர் 5

விடுதலைப் புலிகள் தொடர்பாக நிறைய உல்டா கதைகள் உள்ளன. இவற்றில் சில இயல்பாக மக்கள் மத்தியில் உருவாகியிருப்பவை. இன்னும் சில, வெளிநாட்டு ஊடகங்கள் சிலவற்றால், சும்மா அடித்து விடப்பட்டவை. இந்த வகையான “அடித்துவிடப்பட்ட“ கதைகள் சிலவற்றை பற்றி இந்த தொடரில் இதுவரை வாசகர்களிற்கு குறிப்பிட்டிருந்தோம். இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, புலிகள் பற்றி இயல்பாக மக்கள் மத்தியில் பரவியுள்ள தவறான கதைகளில் ஒன்றை பற்றி குறிப்பிட போகிறோம்.

அதற்கு முன்பாக ஒரு விசயம். இந்த தொடர் வாசகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பல வாசகர்கள், பல விசயங்களை குறிப்பிட்டு, அது பற்றிய உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும்படி கேட்டபடியிருக்கிறார்கள்.

அதிக வாசகர்கள் எம்மிடம் கேட்ட சந்தேகம்- புலிகளின் முக்கிய தளபதி கடாபி தொடர்பானது. கடாபி துல்லியமாக துப்பாக்கியால் சுடுவாராமே என்று தொடங்கி, அவர் நிழலை பார்த்தபடி வானத்தில் பறக்கும் பறவையை சுட்டு விழுத்துவாராம், இன்னொருவரின் தலையில் அப்பிளை வைத்துவிட்டு அதை துல்லியமாக சுட்டாராம், பிரபாகரனுடன் துல்லியமாக சுடும் போட்டியில் ஈடுபட்டாராம் என்று குறிப்பிட்டு, இதெல்லாம் உண்மையா என்று கேட்டார்கள். இன்னும் சிலர், ஒரு காலத்தில் புகழ்பெற்ற தளபதியாக இருந்த கடாபி ஏன் பின்னாளில் அவ்வளவு முக்கியமான தெரியாமலிருந்தார்? அவருக்கு என்ன நடந்தது? என கேட்டார்கள். கடாபியை பற்றி அதிகமாக வாசகர்கள் கேட்டிருந்ததால், கடாபி பற்றி விபரமாக குறிப்பிடுகிறோம்.

கடாபி துல்லியமாக சுடுவாரா? இப்படியொரு கேள்வி கேட்டால், அதற்கான பதில்- ஆம் என்பதுதான். அதேபோல, எதிரே ஒருவரை நிறுத்தி, அவரின் தலையில் அப்பிளை வைத்துவிட்டு, துல்லியமாக அப்பிளை சுட்டு விழுத்துவாரா என்று கேட்டால், அதற்கான பதில்- தெரியாது என்பதாகத்தான் இருக்கும். ஏனெனில், அப்படியொரு விசப்பரீட்சையில் கடாபி என்றுமே ஈடுபட்டதில்லையென்பதே உண்மை.

அப்படியானால், அவர் பற்றி உலாவிய கதைகள் எல்லாம் பொய்யா?

கடாபியின் ஆரம்ப நாட்களில் இருந்து குறிப்பிடுகிறோம். இதை படிப்பவர்களிற்கு எல்லா குழப்பங்களும் தீரும்.

யாழ்ப்பாணத்தின் வடமராட்சி- கொற்றாவத்தை தான் கடாபி பிறந்த இடம். 1984 இல் விடுதலைப்புலிகளில் இணைந்து கொண்டார். அப்போது கடாபி சிறிய பையன். தமிழ்நாட்டில் 09வது பயிற்சி முகாமில் பயிற்சிபெற்றார்.

அப்போது அவரது துப்பாக்கி சுடும் திறன் அறியப்பட்டது.

பிரபாகரனின் மெய்ப்பாதுகவலர் அணியில் இலக்கு தவறாமல் சுடக்கூடியவர்கள் இருக்க வேண்டுமென நினைத்து, கடாபியையும் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைத்தனர். பிரபாகரனிற்கு நெருக்கமாக கடாபி சென்ற சம்பவம் இதுதான்.

அன்றிலிருந்து கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் பிரபாகரனின் நிழலாக கடாபி இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பில் வேறெவரும், கடாபி அளவிற்கு பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததில்லை. பிரபாகரன் முதன்முதலாக மக்கள் முன் தோன்றியது, சுதுமலை அம்மன் கோயிலில் நடந்த கூட்டத்தில். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் புலிகளின் நிலைப்பாட்டை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அது. பிரபாகரன் உரையாற்றும்போது, அருகில் இளைஞனாக நின்றவர் கடாபி.

பிரபாகரன் இறுதியாக பகிரங்கமாக வந்தது, 2002 இல் கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில். அரசு- புலிகள் சமாதான உடன்படிக்கை பற்றி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடினார். அப்பொழுதும் பிரபாகரனிற்கு அருகில் நின்ற மெய்ப்பாதுகாவலர் கடாபிதான்.

தமிழ்பக்கத்தின் முகநூல் பக்கத்தை லைக் செய்து விட்டீர்களா? இதுவரை லைக் செய்யவில்லையென்றால், இந்த லிங்கை கிளிக் செய்து லைக் பண்ணி விடுங்கள்.

ஆனால் ஒரு வித்தியாசம். சுதுமலை கூட்டத்தில், பிரபாகரனின் பாதுகாப்பு அணியின் ஒரு உறுப்பினராக நின்றார். கிளிநொச்சி பத்திரிகையாளர் சந்திப்பில், பிரபாகரனின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்திற்குமே பொறுப்பானவராக செயற்பட்டார்.

பிரபாகரனின் புகைப்படங்கள் எப்பொழுதெல்லாம் வெளியில் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் கடாபியும் அதிலிருப்பார்.

கடாபியின் துப்பாக்கி சுடும் திறன், பிரபாகரனுடனான நெருக்கம் எல்லாம் சேர, இயல்பாகவே போராளிகள், மக்கள் மத்தியில் பலவித “கதைகள்“ உலாவத் தொடங்கின. பிரபாகரனின் பாதுகாப்பு அணியிலேயே கடாபி இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பே மிக இரகசியமானது. அங்கு என்ன நடக்கிறதென்பது வெளியில் தெரியாது. அதிலும், பிரபாகரனின் பாதுகாப்பு அணி இன்னும் பல மடங்கு இரகசியமானது. பாதுகாப்பு அணிக்குள் நடக்கும் விசயங்கள், புலிகளின் மற்றைய படையணிகளிற்குகூட தெரியாது. அவ்வளவு இரகசியமாக வைத்திருப்பார்கள். கடாபி இருந்தது, புலிகளின் பாதுகாப்பு அணியில். எனவே, அவர் பற்றிய தகவல்கள் பல மிகைப்படுத்தியதாகவும், புனையப்பட்டதாகவும் புலிகளின் ஏனைய படையணிகளிற்குள்ளும் பரவியதில் தர்க்க நியாயமுண்டு. புலிகளிற்குள்ளேயே கடாபியை பற்றி இப்படியான “கதைகள்“ உலாவியபோது, மக்களிடம் அவை உலாவியதில் வியப்பொன்றுமில்லைத்தானே.

கடாபி பற்றிய உலாவிய மிகைப்படுத்தப்பட்ட கதைகள் சிலவற்றை பட்டியலிடுகிறோம். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவையை, நிலத்தில் விழும் அதன் நிழலை பார்த்தே கடாபி சுட்டு விழுத்துவார், இன்னொருவரின் தலையில் அப்பிளை வைத்துவிட்டு, நூறு மீற்றர் தொலைவில் நின்று அப்பிளை மட்டும் சுட்டுவிழுத்துவார். ஒரு தகரத்தில் பிரபாகரன் என்ற பெயரை, துப்பாக்கி ரவைகளால் ஏற்படுத்தப்பட்ட ஓட்டைகளின் மூலம் எழுதினார்.

இதெல்லாம் உண்மையில் கற்பனை கதைகள். முக்கியமாக, போராளியின் தலையில் ஒரு பொருளை வைத்துவிட்டு, இன்னொரு போராளி அதை சுட- அவர் எவ்வளவு பெரிய துப்பாக்கி சுடும் வீரனென்றாலும்- புலிகள் அனுமதிப்பதில்லை. புலிகள் அமைப்பிற்குள் எந்தக்காலத்திலும் இப்படியான சாகசங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. துப்பாக்கியால் தவறுதலாகவேனும் சுட்டு இன்னொருவரை காயப்படுத்துவது பயங்கர தண்டனைக்குரிய குற்றமாக புலிகள் கருதினார்கள். துப்பாக்கியை எப்படி கையாள்வது, சக போராளியை அதனால் காயப்படுத்தாமல் இருப்பது எப்படியென்பதில் கறாரான நடைமுறைகளை இறுதிவரை பேணிய புலிகள், இப்படியான வீண் சாகச நிகழ்வுகளை அனுமதிப்பார்கள் என்பது தர்க்க நியாயமே அற்றது.

தகரத்தில் பிரபாகரன் பெயர் எழுதிய விவகாரமும் உண்மையல்ல. இந்த கதை எப்படி கிளம்பியதென தெரியவில்லை. யாரோ நல்ல கற்பனை வளமுள்ளவர்கள் அடித்து விட்டிருக்கிறார்கள்.

இதேபோல, இன்னொரு கதையும் உள்ளது. பிரபாகரனும், கடாபியும் துப்பாக்கி சுடும் போட்டியில் ஈடுபட்டனர். இருவருக்கும் பத்து ரவை வழங்கப்பட்டது. இருவரும் தலா ஒன்பது ரவையை சுட்ட நிலையில், சமமான புள்ளிகளை பெற்றிருந்தனர். பிரபாகரனை போட்டியில் வெல்லக்கூடாது என்பதற்காக பத்தாவது ரவையை இலக்கிற்கு வெளியில் கடாபி சுட்டாராம்!

இந்த கதை உண்மையா?

இதில் பாதி உண்மையுள்ளது. மிகுதி உல்டா. உண்மையை முதலில் குறிப்பிடுகிறோம். துப்பாக்கி சுடும் போட்டிகள் புலிகளிற்குள் வழக்கமாக நடப்பதுண்டு. இப்படியான போட்டிகளை பிரபாகரன் ஊக்கப்படுத்துவார். துல்லியமான துப்பாக்கி சுடுபவர்கள் அமைப்பிற்கு தேவையென பிரபாகரன் நினைத்தார். துப்பாக்கி சுடும் போட்டிகளை பற்றி தெரியாதவர்களிற்காக முதலில் அதைப்பற்றி சிறிய அறிமுகம் தந்து விடுகிறோம். அதை தெரியாமல், நாம் விசயத்தை சொன்னால், படிப்பவர்களிற்கு முழுமையாக புரியாது.

ஒரு மனித உருவம் செய்யப்பட்டு, இலக்காக நிறுத்தப்படும். அந்த உருவத்தை சுற்றி வட்டங்கள் இருக்கும். அந்த வட்டங்கள் சுருங்கி, நெஞ்சுப்பகுதியில் மையம் உருவாக்கப்பட்டிருக்கும். நெஞ்சு பகுதியில் துப்பாக்கி ரவை தாக்கினால், மனிதர்கள் மரணமாகி விடுவார்கள் அல்லவா. அந்த சிறிய வட்டத்திற்குள் சுட்டால் பத்து புள்ளிகள். அதற்கு அடுத்த வட்டத்திற்குள் ரவை பாய்ந்திருந்தால் ஒன்பது புள்ளிகள். இப்படியே ஏழு புள்ளிகள் வரை வட்டம் இருக்கும். ஒரு மனிதனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் பகுதிகளிற்கே அதிக புள்ளிகள்.

Image result for பிரபாகரன்இந்த இலக்குகளில் துப்பாக்கி சுடும் போட்டிகள் புலிகளிற்குள்ளும் அடிக்கடி நடக்கும். தன்னுடைய மெய்பாதுகாவலர் அணியிலுள்ளவர்களுடன் பிரபாகரன் அடிக்கடி சவால் விட்டு, இப்படியான போட்டிகளில் ஈடுபடுவார். சமயங்களில் தளபதிகளுடனும் துப்பாக்கி சுடும் போட்டியில் ஈடுபடுவார். பிரபாகரனும் நன்றாக துப்பாக்கி சுடுவார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், எந்த விசயத்திலும் நல்ல பெறுபேற்றை பெறலாம். துப்பாக்கி சுடலும் இப்படித்தான். பத்து ரவைகளில், நூறு புள்ளிகளை பலமுறை பலர் பெற்றிருக்கிறார்கள். ஒருமுறை நூறு புள்ளி பெற்றவர், எல்லா போட்டியிலும் நூறு புள்ளி பெறுவதில்லை. இன்னொரு முறை தொன்னூற்று ஒன்பதையும் பெறுவார். பிரபாகரன் தன்னுடன் போட்டிக்கு வருமாறு கடாபியையும் அழைத்திருக்கிறார். அதெல்லாம் அடிக்கடி நடக்கும் உற்சாகமான போட்டிகள். பதிவேட்டில் புள்ளிகளை பதியும் சீரியசான போட்டிகள் கிடையாது. அதனால் வெற்றி தோல்வியென்ற பதிவுகள் எதுவும் கிடையாது. அன்றைய நாளில் யார் சிறப்பாக செயற்பட்டாரோ, அவர் அதிக புள்ளியை பெற்றார். அவ்வளவுதான்.

இம்ரான்- பாண்டியன் படையணி

விடுதலைப்புலிகள் அமைப்பில் மிக சக்திமிக்க தளபதிகளில் ஒருவராக கடாபி விளங்கினார். 1995 முதல் 2002 வரை கடாபிக்கு உச்ச காலகட்டம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான் இரண்டாம் நிலை தலைவர் என்றால், கடாபி இன்னொரு விதத்தில் புலிகளிற்குள் ஆளுமை செலுத்தினார். விடுதலைப்புலிகளின் முக்கியமான படையணிகளை அவர்தான் கட்டுப்படுத்தினார். இம்ரான்- பாண்டியன் படையணி, ராங்கி அணி,கவச எதிர்ப்பு அணி, கனரக ஆயுத அணி, கரும்புலிகள், கனரக ஆயுதப்பயிற்சி என ஏராளம்துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒருகாலத்தில், அதிக போராளிகளை வழிநடத்திய தளபதியாகவும் அவர்தான் இருந்தார்.

ஆனால், ஒரேநாளில் கடாபியை அத்தனை பொறுப்பிலிருந்தும் பிரபாகரன் நீக்கினார். அதற்கு என்ன காரணமென்பதை, இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன தொடரில் விபரமாக குறிப்பிடுவோம். புதிய வாசகர்களிற்காக மிக சுருக்கமாக அதை குறிப்பிடுகிறோம்.

பிரபாகரனின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடாபி தலைமையிலான இம்ரான்-பாண்டியன் படையணி ஈடுபட்டதால், அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் இருந்தன. யாரும் புலிகளை விட்டு விலக முடியாது. பிரபாகரனின் இருப்பிடம் பற்றிய தகவல் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. சிறிய பிழை விட்டால்கூட, அந்த படையணியின் சிறைச்சாலையில் அடைத்து விடுவார்கள். வெளியில் ஏதாவது அலுவலாக சென்றால்கூட, உறவினர்களுடன் பேசக்கூடாது. மீறி பேசினாலும் சிக்கல்.

பின்னாளில் புகழ்பெற்ற இன்னொரு தளபதியான இரட்ணம் மாஸ்ரர்தான், இம்ரான்-பாண்டியன் படையணியின் புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். யாராவதொரு போராளி வெளியில் செல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். வழியில் தெரிந்தவர், உறவினர் என யாராவதொருவர் மறித்து கதைத்திருப்பார். மறுநாள், அந்த முகாமிற்கு ஒரு அறிக்கை வரும். குறிப்பிட்ட போராளி, எந்த இடத்தில், எத்தனை பேருடன், எத்தனை நிமிடம் நின்று கதைத்தார் என்ற விபரம் அதில் இருக்கும். ஓரிருமுறை அதற்கு எச்சரிக்கையுடன் மன்னிப்பு கிடைக்கும். அதற்கு பின்னரும் இப்படியே நடந்தால், கடவுளாலும் அவரை காப்பாற்ற முடியாது. கடாபியின் நீதி அப்படி!

புலிகள் அமைப்பின் அசைக்க முடியாத தளபதியாக உருவெடுத்திருந்த கடாபியின் இறுதிக்கணத்தில் நடந்தது என்ன என்பதையெல்லாம் வரும் வாரம் குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here