ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் பெண்ணுக்கு துன்புறுத்தல்: ரயில்வே போலீஸில் புகார்

கொல்கத்தாவில் இளம் பெண்ணும், அவரின் தோழியும் புறநகர் ரயலில் பயணித்தபோது, அந்த பெண்ணின் உடையைக் குறிப்பிட்டு சிலர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

இது குறித்து ரயில்வே போலீஸீல் புகார் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும், அது குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் வைரலானது.

கொல்கத்தாவில் உள்ள சீல்டா ரயில்நிலையத்தில் இருந்து பாரக்போர் பகுதிக்குப் புறநகர் ரயிலில் ஒரு இளம்பெண்ணும், அவரின் தோழியும் கடந்த சனிக்கிழமை பயணம் செய்தனர். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் அந்த இளம் பெண் ஜீன்ஸ் பேண்ட்டும், டிசர்ட்டும் அணிந்திருந்தார். இவர்கள் 2-ம்வகுப்பு பொதுப்பெட்டியில் பயணித்தனர்.

அப்போது, ரயில் இருக்கையில் இருவரும் அமர்ந்தபோது போதுமான இடம் இல்லை என்பதால், சகபயணியை சிறிது தள்ளி உட்காருமாறு அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பயணிக்கும், அந்த இளம்பெண்ணுக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயிலில் மின்விசிறிக்கு நேராகத்தான் நான் உட்காரமுடியும் என்று கூறி அந்தப் பயணி நகர்ந்து உட்கார மறுத்துவிட்டார்.

இதையடுத்து, அந்த இளம் பெண்ணும், அவரின் தோழியும் அந்த இடத்தில் இருந்து எழுந்து செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் இருவரையும் அங்கிருந்த பயணிகள் சிலர் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தும், பெண்கள் என்றால் ஒழுக்கமாக உடை அணிய வேண்டும் என்று ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றுகூறி அவரின் உடையை இழுத்துள்ளனர். பின்னர் அடுத்த ரயில் நிலையம் வந்தவுடன் ரயிலில் இருந்து இறங்கிய அந்த இளம் பெண், ரயில்வே போலிஸில் புகார் செய்தார்.

மேலும், இது குறித்து அந்த இளம்பெண் தனது பேஸ்புக்கில் மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நானும், எனது தோழியும் கொல்கத்தா புறநகர் ரயிலில் சனிக்கிழமை பயணித்தோம். அப்போது பொதுப்பெட்டியில் ஏறினோம். இருக்கையில் அமர முயன்றபோது போதுமான இடம் இல்லை என்பதால், அதில் அமர்ந்திருந்த பயணி சிறிது நகர்ந்து அமருமாறு கூறினோம். அதற்கு அவர் எங்களுடன் சண்டையிட்டார். நகரமுடியாது எனத் தெரிவித்துவிட்டார். அதன்பின் நானும், எனது தோழியும இருக்கையில் இருந்து எழுந்து நகர்ந்தோம்.

அங்கிருந்து ஒரு பயணி ஒருவர், என்னைப் பார்த்து வீட்டுக்குச் சென்று இருவரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் போன்ற ஒழுக்கமில்லாத நபர்கள் மீதுதான் கொல்கத்தா மெட்ரோ ரயில்நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற கவர்ச்சியான உடையை அணிந்து பொது இடத்துக்கு வராதீர்கள். நீங்கள் ஏன் பொதுப்பெட்டியில் ஏறினார்கள் என்றனர்.

எனக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதங்களை எனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். அப்போது நான் பேசுவதைக் கேட்ட பயணிகள் இருவர் நீ பெண், அடக்கமாக இரு, அதிகமாகப் பேசாதே எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள் என்றனர்.

அங்கிருந்த பயணிகள் இப்படி என்னிடம் முரட்டுத்தனமாகவும், நாகரீகமில்லாமல் பேசுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. வயதானவர்கள் கூட பெண் என்றும் பாராமல் தவறாகப் பேசி எனது உடையை இழுத்தனர்.

பெண் என்றால், இந்த நாட்டில் இதுதான் நிலைமையா?.இதுதான் நாம் சார்ந்திருக்கும் சமூகமா?. இந்த சமூகத்துக்கு மத்தியில்தான் நாம் ரயிலிலும், பஸ்ஸிலும் சென்று வருகிறோமா. வயதில் மூத்தவர்களிடம் இருந்து இதுபோன்ற செயல்பாடுகளை எதிர்பார்க்கவில்லை

இவ்வாறு அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கொல்கத்தா ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, புறநகர் ரயிலில் பயணித்த போது பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்ததாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here