விதைப்பை ஏற்ற இறக்கமாக இருப்பது கொடை! : டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 20

ஆண்- பெயர் குறிப்பிடவில்லை (28)
வவுனியா

எமக்கு திருமணமாகி நான்கு மாதமாகிறது. குழந்தையை சிறிதுகாலம் தள்ளி வைத்துள்ளோம். நான் ஆணுறை பாவிப்பது வழக்கம். ஆனால் அதில் நான் வசதியாக உணரவில்லை. அடிக்கடி கிழிந்து போவது போன்ற குழப்பங்கள் வந்து விடுகிறது. தரமான ஆணுறை எது?

டாக்டர் ஞானப்பழம்: தாம்பத்யத்தின்போது ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக ஆணுறை கிழிந்துபோக வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சூழலில் ஆணுறை சிதைந்து போவதை கவனிக்க முடியாமல் போகும். இத்தகையச் சூழலில் பெண் கர்ப்பமாக அதிக வாய்ப்பு உள்ளது.

‘ஆணுறை பயன்படுத்துவதால் முழுமையான தாம்பத்யத்தை அனுபவிக்க முடியவில்லை’ என்பது போன்ற சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், சந்தைகளில் விற்கப்படும் ஆணுறைகள் மிகவும் மெலிதாக, அதிக வழவழப்புத் தன்மையுடன்தான் இருக்கின்றன. இத்தகைய ஆணுறைகளால் தாம்பத்யம் சிறக்கவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சந்தையிலுள்ளவை அனைத்தமே தரமானவைதான். உங்கள் வசதியை பொறுத்து தெரிவு செய்யலாம்.

பொதுவாக, தொடர் தூண்டுதல் இருந்தால்தான் தாம்பத்யம் இனிக்கும். தம்பதிகளுக்கிடையிலான ஸ்பரிசம் குறைந்தால் அது ஆணுக்குச் சலிப்பை ஏற்படுத்திவிடும். நேரடியாகத் தாம்பத்யம் வைத்துக் கொள்ளாமல் வேறு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போது பெண்ணின் ஒத்துழைப்பு பல வகைகளில் தேவைப்படும். ஆணுறையைப் பயன்படுத்தும்போது, அதன் முனைப் பகுதியை அழுத்திப் பிடித்துக் கொள்வது அவசியம். இப்படிச் செய்வது, அதிலிருக்கும் காற்றை வெளியேற்றிவிடும். தாம்பத்யத்தின்போது ஆணுறை கிழிந்து போகாமலிருக்க உதவும். ஆணுறையில் சிறு துளைகள் ஏதும் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய அதில் காற்றை ஊதிப் பரிசோதிக்கலாம்.

ஆணுறை பயன்படுத்தும்போது, அதை மிக கவனமாகக் கையாள வேண்டும். கூர்மையான நகம் அதில்பட்டு கிழிந்துவிட வாய்ப்புள்ளது. அதேபோல், வழவழப்புக்காகக் கடைகளில் விற்கப்படும் பெட்ரோலியம் க்ரீம்களைப் பயன்படுத்தினால், வேதியியல் மாற்றம் ஏற்பட்டு ஆணுறை சேதமடைய வாய்ப்புள்ளது.

தாம்பத்யத்தின்போது இறுதிநிலையை எட்டியதும், மிகக் கவனமாக ஆணுறையின் மேல் பகுதியில் இருக்கும் வளையத்தைப் பிடித்துக் கொண்டு மெதுவாக அகற்ற வேண்டும். தரமான ஆணுறை பயன்படுத்தினால், தாம்பத்யத்தின்போது இன்பம் அதிகரிக்குமே தவிர குறையாது. கருத்தடைச் சாதனங்களை சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தினால் தாம்பத்யம் ஓர் எல்லையில்லா இன்பமே.

எம்.புவனேஸ்வரன் (20)
ஒட்டுசுட்டான்

எனது விதைப்பைகள் இரண்டும் சம அளவில் இல்லை. ஒன்று சற்று பெரிதாகவும், ஒன்று சற்று சிறிதாகவும் உள்ளது. விதை இறக்கமாக இருக்கலாமென நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு உடலில் எந்த வலியோ, பிரச்சனையோ இல்லை. நான் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமா? விந்து உற்பத்தி செய்வதை அது பாதிக்க செய்யுமா?

டாக்டர் ஞானப்பழம்: இந்த வயதில் உடல் பற்றிய நிறைய சந்தேகங்கள் வரும். அதை ஊதிப் பெருப்பிக்க நண்பர்கள் இருப்பார்கள். பயத்துடன் நில காலத்தை கழிப்பது இந்த வயதில் பலருக்கும் நேரும் அனுபவம்.

நீங்கள் எந்த பயமும் கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் பயப்படும் விடயம், இயற்கை உங்களிற்கு தந்த கொடை என்பது தெரியுமா?

விளக்கமாக சொல்கிறேன்.

ஆணுறுப்புக்கு கீழே அதை ஒட்டி சுருக்குப் பை போல் தொங்குவதுதான் பெயர் விதைப்பை. ஒரு உயிர் உருவாவதற்கான விதைகளைச் சுமக்கும் பை. இது உடலுக்கு வெளியே இரண்டு மாம்பிஞ்சு போல ஆணுறுப்புக்குக் கீழே தொங்குகிறது.

இரண்டும் பொதுவாக சம அளவில் தொங்கிக்கொண்டிருப்பது இல்லை. சற்றே ஏற்ற இறக்கம் இருக்கும். அதற்காகப் பயப்பட வேண்டியது இல்லை.

டெஸ்டோஸ்டிரான் (Testosterone) என்பது ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பி. இந்த ஹார்மோன்தான் உயிர் அணுக்களை உற்பத்திச் செய்யத் தூண்டுகிறது. செமினொஃபெரஸ் ட்யூபள்ஸ் (Seminiferous tubules) எனப்படுகிற, விதைக்குள் இருக்கிற இழைகளில் உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஓர் ஆண் வயதுக்கு வருவதாகச் சொல்லப்படும் பதின்மப் பருவத்திலேயே விதையானது விந்துவை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது.

விதைப்பைகள் சில நேரங்களில் லூஸாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் இறுக்கமாக இருக்கிறது? பொதுவாக விதைப்பை எப்படி இருக்க வேண்டும்?

விதைப்பைகள் உடலின் சீதோஷண நிலைக்கு ஏற்ப சுருங்கியும் தொளதொளப்பாகவும் இருக்கும். பொதுவாக உடலின் வெப்பநிலை 98.6 ஃபாரன் ஹீட் இருக்க வேண்டும். ஆனால், விதைப்பைகள் அதைவிட 4 ஃபாரன்ஹீட் குறைந்த வெப்பநிலையில் இருந்தால்தான் சிறப்பாக செயல்படும். அதாவது விந்துவை உருவாக்க இயலும். அதனால்தான் அது உடலுக்குள் இல்லாமல் வெளியே இருக்குமாறு இயற்கை அமைத்திருக்கிறது.

வெயில் காலங்களில் உடல் சூடாக இருக்கும். அப்போது விதைப்பை உடலைவிட்டு விலகி, தொளதொளப்பாக மாறிவிடும்.

குளிர் காலங்களில் விதைப்பைக்கு வெப்பநிலை போதாது. அதனால் உடலோடு ஒட்டி, இறுக்கமாக இருக்கும். பொதுவாக உடல்உறவு கொள்ளும் நேரங்களில் இறுக்கமாக மாறி, ஆணுறுப்புக்கு நெருங்கி வந்துவிடும்.

விதைகள் இரண்டும் சமமாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது ஏன்?

ஒன்றுக்கு ஒன்று ஏற்ற இறக்கமாக இருப்பதும் இயல்பானதுதான். அதற்கு பயப்பட வேண்டியது இல்லை.

விதைப்பை, விந்து உற்பத்தியாகும் இடம். இனத்தை விருத்தி செய்வதற்கான முக்கியமான பகுதி. பக்கவாட்டில் அடிபடும்போது இரண்டும் ஒன்றின் மீது ஒன்று பட்டு நசுங்க வாய்ப்பு உண்டு. அதே போல் கீழே தவறி விழும்போது விதைகளில் அடிபட நேர்ந்தால் என்ன ஆகும்?

இரண்டும் மேலும் கீழுமாக இருப்பதால் இரண்டும் அடிபட்டு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இரண்டும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இயற்கை செய்திருக்கும் அரிய ஏற்பாடு இது.

இதனால் விந்து உற்பத்தி பாதிக்காது. மூன்று காரணங்களால் விந்து உற்பத்தி ஆகாமல் போகும்.

பிறவிக் கோளாறு. உதாரணத்துக்கு… பிறக்கும்போதே ஹார்மோன் கோளாறு இருந்து, விந்து செல் உற்பத்தி ஆகாமல் போய்விடுதல் உண்டு.

விளையாட்டுகளில் அடிபடுதல், கதிர்வீச்சு தாக்குதல், உயர் வெப்பத் தாக்குதல் போன்ற காரணங்களால் விந்து உற்பத்தி ஆகாமல் போக வாய்ப்புண்டு.

புட்டாலம்மை, பால்வினை நோய் போன்றவற்றால் சிலருக்கு விந்து குறைபாடு ஏற்படும்.

கடந்த பாகத்தை படிக்க: மனைவியின் ஒத்துழையாமைக்கு வேறு காரணமும் உள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here