பஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அம்மான்!


கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வெள்ளிக்கிழமை(13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.

இதன் போது பஸ் தரப்பிடத்தில் நின்ற பயணிகள் பொதுமக்களுடன் உரையாடிய பின்னர் இலங்கை போக்குவரத்து சாலை நேரக்காப்பாளர் மற்றும் பஸ் நடத்துநர்களிடம் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம் இவ்வாறு குறைகளுடன் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருப்பது கவலைக்குரியது. இங்கு பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரியகங்களை எதிர்நோக்கி வருகின்றதை நேரடியாக நான் பார்த்தேன். இந்த பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாகக் காணப்படுவதை ஏற்க முடியாதுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் இந்த பஸ் தரிப்பிடத்திற்கு 10 பில்லியன் நிதியுதவியை முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன். மழை காலங்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக இங்குள்ள பொதுமக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

பஸ் தரிப்பு நிலையக் கட்டடமும் மோசமான நிலையில் காணப்படுவதோடு இப்பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுவது சுகாதார சீர்கேட்டை எமது மக்களுக்கு ஏற்படுத்தும். அத்துடன் உடனடியாக நீண்ட தூரம் பிரயாணம் செய்யவரும் பயணிகள் தங்குவதற்கும் குறிப்பாக அமர்ந்து கொள்வதற்கான வசதிகளும் என்னால் உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

இவ்விஜயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, அம்பாறை மாவட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயற்பாட்டாளர் சுதா ஆகியோர் உடனிருந்தனர்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here