யாழில் டெங்கு ஒழிப்பிற்கு துரித நடவடிக்கை: விசேட இலக்கமும் அறிமுகம்!

யாழில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடலொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தலைமையில் முப்படையினர் மற்றும் மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் அடுத்த மூன்று வாரகாலங்கள் யாழில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக் காலப் பகுதியில் டெங்கு பரவும் அபாயம் உள்ள இடங்களைக் கண்டறிந்து காணி உரிமையாளர் அல்லது வீட்டு உரிமையாளருக்கு எதிராக உடனடியாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு பரிந்துரைக்கப்பட்டு உடனடியான ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுகின்ற குப்பைகள் உள்ள இடங்கள் தொடர்பில் விசேட கவனமெடுத்து அவற்றை உடனடியாக அகற்றுதல் மற்றும் பொது மக்கள் தமது வீட்டிலுள்ள குப்பைகளைத் தரப்பிரித்து வழங்க வேண்டும், சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம சேவகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி சபைகள் என்பன இணைந்து பொதுவான ஒரு செயற்திட்டத்தை செய்வதற்கான இணக்கப்பாடும் எட்டப்படன.

அதே போல இத்திட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுடன் பொலிஸார் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கிராமங்கள் குறிப்பாக வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படுமென்றும் முடிவு எட்டப்பட்டது. இது தொடர்பான பொது மக்களுக்கு அசவர இலக்கமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. 021 222 5000 என்ற இலக்கத்திற்கு அழைத்தால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாவனையில் இல்லாமல் இருக்கின்ற வெற்றுக் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு துப்பரவாக்கும் பணிகளை உள்ளுராட்சி சபைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் அவ்வாறான வெற்றுக் காணிகள் கண்டறியப்படுமிடத்தே அவை தொடர்பில் உடனடியாக எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட வேண்டுமென்று அவ்வாறு இல்லாது போனால் அதற்கான தண்டப்பணத்தை வருடாந்த சோலை வரியுடன் இணைத்து அறவிடப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here