மாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி!


13வது தெற்காசிய விளையாட்டு நிகழ்வில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற டில்ஷி குமாரசிங்க பாராட்டு மழையில் திளைத்து வருகிறார்.

நோபாளத்தில் நடந்து முடிந்துள்ள 13வது தெற்காசிய விளையாட்டு நிகழ்வுகளில் இலங்கை இம்முறை அதிகளவான பதக்கங்களை வென்றிருந்தது. பல தரப்பும் இதை பாராட்டி வருகையில், அனைத்து தரப்பினராலும் அதிகம் விதந்தோப்பட்டு வருகிறார் டில்ஷி குமாரசிங்க.

அவர் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம் வென்றிருந்தார். 400 மீற்றர் பெண்கள் அஞ்சலோட்டத்திற்கு மட்டுமே அவர் தெரிவாகியிருந்த நிலையில், திடீர் அதிர்ஷ்டம் காரணமாக ஏனைய இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

400 மீற்றர் அஞ்சலோட்டம், 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் டில்ஷி தங்கம் வென்றிருந்தார்.

400 மீற்றர் ஓட்டப்பந்தயத்திற்கு இலங்கை சார்பில் தெரிவான வீராங்கணை நதீஷா ராமநாயக்க. அவர்தான் இலங்கை சம்பியன். நோபாளத்திற்கு சென்று சேர்ந்ததும் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று வீரராக டில்ஷி களமிறக்கப்பட்டார். தங்கம் வென்றார்.

800 மீற்றர் ஓட்டப் பந்தயத்திற்கு நிமலி லயனாராய்ச்சி தெரிவாகியிருந்தார். ஆனால் விபத்தில் சிக்கியதால், இறுதி நேரத்தில் டில்ஷி களமிறக்கப்பட்டார். தங்கம் வென்றார்.

கிடைத்த வாய்ப்புக்களை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டதால், இலங்கை தடகள வானில் புதிய நட்சத்திரமாக உருவாகியுள்ளார் டில்ஷி குமாரசிங்க.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here