மன்னார் முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஏற்படும் அநீதி

மன்னார் மாவட்டம் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், குறித்த வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள போதும், அவர் வைத்தியசாலை கடமைகளை விட தனது தனியார் வைத்தியசாலையிலேயே தமது நேரத்தை செலவிடுவதாகவும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் ‘தமிழ் பக்கத்தின்’ கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மன்னார் பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவே தனியார் வைத்திய நிலையம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

நாளாந்தம் நோயாளர்கள் காலை 7 மணி முதல் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்குச் சென்று மருந்து சிட்டையினை பெற்றுக்கொள்ளுகின்ற போதும் காலை 8.30 மணிக்கு கடமைக்கு வர வேண்டிய வைத்தியர் 9.15 மணிக்கு பின்னரே வைத்தியசாலைக்கு வருகின்றார்.

காலை 9 மணி வரை தனது தனியார் வைத்திய நிலையத்தில் தனது வைத்திய சேவைகளை முன்னெடுப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்ற நிலையில் வைத்தியசாலையில் இருந்து குறித்த வைத்தியருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியதன் பின்னரே வந்து நோயாளர்களை பார்வையிடுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் தொற்றுக் காய்ச்சலின் காரணமாகவும் அதிகமான மக்கள் முருங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லுகின்றனர்.

அவர்களில் சிலர் வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பலருக்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் வைத்தியசாலை நோயளர் விடுதியில் வைத்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக வெளியில் அனுப்பப்படுகின்றது.

அதுவும் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தனது தனியார் மருந்தகத்தில் குறித்த இரத்த மாதிரியை கொடுத்து பணம் செலுத்தி இரத்த பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் இரத்தத்தை பெற்று தனியார் நிலையங்களில் பரிசோதிப்பதும், மக்களிடம் அதிக பணம் குறித்த தனியார் வைத்திய நிலையம் அறிவீடு செய்வதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே முருங்கன் ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மக்கள் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here