அட்டகாசம் செய்த யாழ் ரௌடிகள் பொலிசாரை கண்டதும் மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு தப்பியோடினர்

யாழ். மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு ரௌடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் செய்துவிட்டு செல்லும் வழியில் பொலிஸாரைக் கண்டவுடன் மோட்டார் சைக்கிள்களை போட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

சுதுமலை வடக்கு மானிப்பாயிலுள்ள வீடொன்றுக்கு இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கில்களில் வாள்களுடன் ஆறு ரௌடிகள் சென்றுள்ளனர். முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல் குறித்த வீட்டு இளைஞரைத் வீட்டிற்குள் தேடியுள்ளனர்.

ஆனால் அவர் வேலைக்கு சென்றதால் அந்தச் சமயம் வீட்டில் இருக்கவில்லை. இதனையடுத்து வீட்டின் கண்ணாடிகள் கதவுகளையும் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளனர்..

அத்தோடு குறித்த வீட்டிலிருந்தவர்களையும் வாள்கள் கொண்டு அச்சுறுத்தியுள்ளனர். ரௌடிகளின் அட்டகாசத்தையடுத்து வீட்டிருந்தவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர்.

ஆயினும் வீட்டை அடித்து நொருக்கி அட்காசத்தை மேற்கொண்டு விட்டு குறித்த ஆறுபேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஆயினும் தப்பிச் செல்லும் வழியில் மானிப்பாய் பொலிஸார் வந்திருந்தனர். இவ்வாறு பொலிஸார் வந்ததையடுத்து தமது இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் வீதியில் போட்டுவிட்டு ரௌடிகள் ஆறுபேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் இரண்டு மோட்டார் சைக்கிளையும் அவர்கள் பயன்படுத்திய வாள்களையும் மீட்டுள்ள மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here