‘கம்பெரலிய, வடமாகாணசபை ஊழல்களை விசாரணை செய்ய ஆணைக்குழு அமைப்பேன்’: அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

துரதிஷ்டவசமாக எனக்கு தமிழ் மக்களின் வாக்குகள் போதவில்லை. நான் அமைச்சராக இருந்தபோதும், சில விடயங்களை பேச முடியவில்லை. அண்மையில் கோட்டாபய சொன்னார், தீவுப்பகுதியில் டக்ளஸ் எப்படியும் வெற்றி பெற்றுவிடுபவர், இந்த முறை கோட்டை விட்டு விட்டார் என. நான் என்ன செய்ய முடியும். கேட்டுக் கொண்டுதானிருக்க முடியும். என்னை எவ்வளவுக்கு எவ்வளவு பலப்படுத்துகிறீர்களோ அவ்வளவிற்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளை என்னால் தீர்க்க முடியும் என தெரிவித்துள்ளார் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், கடற்தொழில், நீரியல்வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.

இன்று (8) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

கடந்த அரசின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கம்பெரலிய மற்றும் முன்னாள் வடமாகாணசபையின் நிர்வாக காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெற்றியடைய உள்ளார். அந்த வெற்றியில் தமிழ் மக்களும் பங்குபற்றுவதன் மூலம், அந்த வெற்றியை தமது வெற்றியாகவும் மாற்றிக் கொள்ள வேண்டுமென கேட்டிருந்தோம் துரதிஸ்டவசமாக, மக்கள் மத்தியில் எமது கருத்துக்கள் போகவில்லை.

அதைவிட கடந்த ஐந்தாறு வருடங்களாக முன்னாள் ஆளுங்கட்சி உட்பட, தமிழ் தரப்பிலுள்ளவர்களும் மேற்கொண்ட பொய்யான பிரச்சாரங்கள், மக்கள் மத்தியில் ஒரு வடுவாக பதிந்திருந்தது. தமிழ் ஊடகங்களினாலும் தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டார்கள் என்பதை மிக கவலையுடன் சொல்ல விரும்புகிறேன்.

மாற்று கொள்கையுடன், மாற்று கருத்துடன், மாற்று வேலைத்திட்டத்துடன்தான் எமது அரசியல் வேலைத்திட்டங்களை ஆரம்பத்திலிருந்து மேற்கொண்டு வந்தோம். ஆனால் பரந்துபட்டளவில் மக்களிடம் எமது கருத்து போகவில்லை. அதனால் ஒவ்வொரு முறையும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பிற்கு வாக்களித்தவர்களை விட, எனக்கு வாழ்த்து சொன்னவர்கள் அதிகம். இதன்மூலம் அவர்கள் சரியான திசையில் யோசிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

ஜனாதிபதி தேர்தலில் நான் தோல்வியடைந்து விட்டேன் என்ற மன பாதிப்பு காரணமாக, இந்த முறை அமைச்சை எடுக்கும் விருப்பமிருக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் வாக்கை, ஆசனங்களை எடுத்த பின்னர் இதைப்பற்றி யோசிக்கலாமென நினைத்தேன். இதன்பின்னர், கொழும்பில் எல்லா தமிழ் ஊடகவியலாளர்களையும் சந்தித்தேன். அமைச்சு பொறுப்பை ஏற்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். மதகுருமார்கள், எமக்கு வாக்களித்தவர்கள், கட்சிக்காரர்கள் அனைவரும் அமைச்சு பதவியை ஏற்குமாறு வழியுறுத்தினர். இதனால்தான் அமைச்சு பொறுப்பை ஏற்றேன்.

என்னை கடலில் தள்ளி விட்டுள்ளார்கள். நீந்தித்தான் ஆக வேண்டும். தேசிய அமைச்சு என்ற பொறுப்பு என்ற ஒரு கருங்கல். தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ற கருங்கல் இன்னொன்று. கடந்த காலங்களில் நீந்திய அனுபவத்தின் அடிப்படையில் இந்த பாரமான கருங்கற்களுடன் நீந்த முடியுமென நம்புகிறேன்.

கொழும்பிலிருந்து ஒரு ஊடகவியலாளர் நேற்று கேட்டார், நீங்கள் சொன்ன இரண்டு கற்கள் ஜனாதிபதியும், பிரதமருமா என கேட்டார். இல்லையில்லை, அவர்கள் என்னை தூக்கி விடுவார்களே தவிர, மூழ்கடிக்க மாட்டார்கள் என்றேன்.

தமிழ் மக்களும் சரியாக சிந்தித்து, சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும், அப்படி செல்பவர்களிற்கு பக்கபலமாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சரவையில் மூப்பின் அடிப்படையில் 5வது இடத்தில் நான் இருக்கிறேன். தமிழ் அரசியலில் நாடாளுமன்ற மூப்பின் அடிப்படையில் நானே முதலிடத்தில் உள்ளேன்.

இன்னொரு தேர்தல் வரப் போகிறது என்றதும், சர்வதேச சமூகம் என கூற ஆரம்பித்து விட்டனர். ஜனாதிபதி தேர்தலில் சக தமிழ் கட்சிகள், கோட்டாவை எப்படி விமர்சித்தார்கள் என்பது உங்களிற்கு தெரியும். வெள்ளை வான் ராஜா, முதலைக்கு வெட்டிப் போடுகிறார் என்றார்கள். ஆனால் அவர் தேர்தலில் வென்றதும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்துகிறார்கள்.

அரசியல்ரீதியான விமர்சனம் செய்து விட்டு, வாழ்த்துவது வேறு. இங்கு அவர்கள் சுமத்தியவை பாரதூரமானவை. மரணதண்டனை கொடுக்க வேண்டும், கழுவேற்ற வேண்டுமென சொன்னவர்கள், இப்பொழுது வாழ்த்து சொல்லி, அரசில் பங்கேற்க தயாரென சொல்ல தயாராகி விட்டனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியும், சுயலாபமுமே காரணம். அதனால் சர்வதேசம் என கூற தொடங்கியுள்ளனர். நெருக்கடியான காலகட்டத்தில் வராத சர்வதேசம் இனி வராது. இந்தியா மட்டும் பிரச்சனையில் அக்கறை காட்டும். ஈ.பி.டி.பியின் நிலைப்பாடான 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே எமது நிலைப்பாடென இந்தியா தெளிவாக சொல்லி விட்டது.

இதை நான் வெளியில் சொல்வது சரியில்லை. இந்திய பிரதமருடனான  சந்திப்பின் போது, வடக்கு மீனவர் பிரச்சனையை, தானே அந்த மக்களின் பிரதிநிதியாக இலங்கை ஜனாதிபதி பேசினார். அதை தான் தீர்ப்பேன் என்றார். அப்போது, உங்களின் கடற்றொழில் அமைச்சர் யார் என அவர்கள் கேட்க, டக்ளஸ் தேவானந்தா என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர் பிரச்சனைகளை தீர்ப்பார் என அவர்கள் கோட்டாவிடம் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கை திரும்பியதும், இரு நாட்டு மீனவர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோட்டா என்னிடம் சொன்னார். அதை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும், விரைவில் அங்கு செல்லவுள்ளதாகவும் அவருக்கு நான் சொன்னேன். அப்போது, முன்னாள் ஜனாதிபதி அப்போது சொன்னார், டக்கி நீங்கள் அங்கு போக முடியாதே என. நான் சொன்னேன், இல்லையில்லை, நான் அங்கு போகலாம். நீங்களும் சக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு எடுபட்டு விட்டீர்கள் என.

சூளைமேடு துப்பாக்கிச்சூடு வழக்கில், நான் தேடப்படும் குற்றவாளியென நீதிமன்றம் அறிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அது பொய். (தீர்ப்பின் பிரதியை காண்பிக்கிறார்)

கடந்த தேர்தலில் என்னை நம்பி வாக்களியுங்கள் என நான் கேட்டேன். ஆனால் மக்கள் என்னை நம்பாமல், கோட்டாவை நம்பி, சஜித்திற்கு வாக்களித்து விட்டனர். என்னுடைய இலக்கு என்னவென்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆனால் அரசாங்கத்துடன் பேசும் மனநிலையில் நான் இல்லை. நான் சொன்னதை மக்கள் கேட்கவில்லை, என்னை தோற்கடித்து விட்டனர் என்ற வருத்தம் உள்ளது.

எந்தளவிற்கு எந்தளவு மக்கள் என்னுடன் அணி திரள்கிறார்களோ, என்னை பலப்படுத்துகிறார்களோ, அந்தளவிற்கு 13வது திருத்தத்தை நான் முன்னெடுக்க நடவடிக்கையெடுப்பேன்.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளுடன்தான் கோட்டா வந்துள்ளார். பெரும்பான்மை மக்களின் சம்மதத்தையும் எடுத்துக் கொண்டுதான் அவர் போவார். ஏனெனில் அவர்களின் வாக்குகளினால்தானே அவர் தெரிவானார்.

தமிழ் மக்களிற்கு தீர்வு உள்ளது. இல்லாத ஒன்றுக்கு நான் வழிகாட்டவில்லை. 13வது திருத்தச் சட்டம் எமது அரசியல் யாப்பில் உள்ளது. இந்தியாவும், டக்ளசும் சொல்வது அதைத்தான். இருக்கின்ற ஒன்றைத்தான் நான் சொல்கிறேன். சக தமிழ் கட்சிகளை போல இல்லாத ஊருக்கு நான் வழிகாட்டவில்லை.

சொல்வதை செய்வதுதான் எமது நடைமுறை. அதற்கேற்ப ஜனாதிபதியும், பிரதமரும் வந்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கு தமிழ் மக்களின் வாக்குகள் போதவில்லை. நான் அமைச்சராக இருந்தபோதும், சில விடயங்களை பேச முடியவில்லை. அண்மையில் கோட்டாபய சொன்னார், தீவுப்பகுதியில் டக்ளஸ் எப்படியும் வெற்றி பெற்றுவிடுபவர், இந்த முறை கோட்டை விட்டு விட்டார் என. நான் என்ன செய்ய முடியும். கேட்டுக் கொண்டுதானிருக்க முடியும்.

நான் மக்களுடன் பேரம் பேச தயாராக இல்லை. போல அரசியல் செய்ய தயாராக இல்லை. அப்படியென்றால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.

தேர்தல் வரை மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன்தான். ஆனால் வாக்களிக்கும் போது அவர்களிற்கு மயக்கம் வந்து விடுகிறது. நாங்கள் அப்படி கதைத்தோம் இப்படி கதைத்தோம் என்கிறார்கள். எனக்குத்தான் வாக்களித்ததாக வருபவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால் பெட்டி நிறைந்து இருக்க அல்லவா வேண்டும்?

வடமாகாணசபையின் நிர்வாகத்திலும், கம்பெரலிய, ஐ ரோட் திட்டங்களில் நடந்த ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய விசாரணைக்குழு அமைக்கவுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here