தங்கமாக மாறும் வெங்காயம்: புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்


வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், புதுமண தம்பதிக்கு வெங்காயத்தை நண்பர்கள் பரிசளித்த சுவாரஸ்ய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.200ஐ தொட்டுவிட்டது. இதனால் ஓட்டல்களில் உள்ள சாப்பாடுகளில் வெங்காயத்தை அதிகமாக காண முடியவில்லை.

வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தை மிகவும் விலையுயர்ந்த பொருளாக பாவித்து மீம்ஸ்கள், காமெடிகள், டிக்-டாக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

இந்த நிலையில் வெங்காய விலை உயர்வால் புதுமண தம்பதிக்கு அவர்களின் நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக அளித்த சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது.

பாகல்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின்போது புதுமண தம்பதிக்கு அவர்களின் நண்பர்கள் பரிசுப்பெட்டியை அளித்தனர்.

அந்த பெட்டியை அவர்கள் பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே வெங்காயங்கள் இருந்தன. இதை பார்த்து புதுமண ஜோடி மற்றும் திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் சிரித்தனர்.

அதேநேரத்தில் வெங்காய விலை உயர்வால் அதை தங்கநகையாக பாவித்து நண்பர்கள் பரிசளித்ததாக புதுமண ஜோடி உணர்ந்தனர். அதன்பிறகு புதுமண ஜோடி மற்றும் அவர்களின் நண்பர்கள் வெங்காய பரிசுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண ஜோடிக்கு வெங்காயம் பரிசளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here