அமெரிக்கா- தலிபான் பேச்சு டோஹாவில்!


நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு டோஹாவில் அமெரிக்கா தலிபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “அமெரிக்கா – தலிபான்கள் இடையே கத்தார் தலைநகர் டோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்கி உள்ளது. ஆப்கனில் வன்முறையை குறைப்பதே போர் நிறுத்த ஏற்பட வழி வகுக்கும் என்பது இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருந்தது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆகியோரைத் தொடர்புகொண்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தலிபான்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயாராகி இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here