எல்லாக்கரைகளையும் தழுவிப் பாய்ந்த ஆறு; அருளருக்கு அஞ்சலி: மு.சந்திரகுமார்!


அருளரின் இழப்பு ஈழத்தமிழ்ச்சமூகத்துக்குப் பல வழிகளிலும் பேரிழப்பாகும். அருளரின் இழப்பை தமிழ்ச்சமூகம் உணர்ந்து கொள்வதற்குக் காலம் செல்லும். ஆனாலும் அவருடைய விடுதலைப்போராட்டப் பங்களிப்பு கால வெளியில் நீண்டதாகவே இருக்கும்.

என தெரிவித்துள்ளார் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார்.

ஈழப்போராட்டத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான அருளரின் (அருள்பிரகாசம்) மறைவிற்கு அவர் வெளியிட்டுள்ள அஞ்சலிக்குறிப்பிலேயே இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அஞ்சலியில்,

ஈழப்போராட்டத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான தோழர் அருளரை இழந்து விட்டோம். அருளரின் இழப்பு ஈழத்தமிழ்ச்சமூகத்துக்குப் பல வழிகளிலும் பேரிழப்பாகும். அருளரின் இழப்பை தமிழ்ச்சமூகம் உணர்ந்து கொள்வதற்குக் காலம் செல்லும். ஆனாலும் அவருடைய விடுதலைப்போராட்டப் பங்களிப்பு கால வெளியில் நீண்டதாகவே இருக்கும்.

அருளர், தமிழ் பேசும் சமூகங்களின் விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைத் தியாகம் செய்த மூத்தபோராளியாவார்.

ரஷ்யாவிலுள்ள லுமும்பா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்று, லண்டன் சென்ற அருளர் 1975 களில் ஈழப்புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) ஸ்தாபக உறுப்பினராக விளங்கினார். தொடர்ந்து விடுதலை இயக்கங்களுக்கிடையே ஒற்றுமையையும் ஒருங்கிணைவையும் விரும்பிய மூத்த போராளியாகச் செயற்பட்டார். இதற்காக அவர் தன் வாழ்க்கைக் காலம் முழுவதும் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தார். அவருடைய முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்றாலும் அவருடைய பங்களிப்பும் அந்த எண்ணமும் உயரியதே. இதனால் அருளரை அனைத்து அரசியற் தரப்பினரும் மதித்திருந்தனர்.

ஈழத்தமிழரின் விடுதலைக்கு ஆயுதப்போராட்டமே ஒரே வழி என்ற நிலை வந்தபோது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுத் திரும்பி ஈழத்திலும் இந்தியாவிலும் லண்டனிலுமாகப் பல போராட்டப்பணிகளை ஆற்றினார் அருளர். எந்தச் சூழலில் வாழ்ந்தாலும் ஈழமக்களின் அரசியல் ஈடேற்றமே அருளரின் கனவாக இருந்தது. இதற்காக அவர் அரசியல், பொருளாதார, சமூக ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் அருளர் ஈழ மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக பல முக்கியமாக நூல்களை எழுதினார்.. இத்தகைய ஆற்றலும் உயரிய பங்களிப்புகளுமுடைய அருளரை இப்போது நாம் இழந்து விட்டோம். அவர் தன்னுடய வாழ்க்கைக் காலத்தில் கொண்டிருந்த லட்சியக் கனவை தமிழ்ச்சமூகம் அடையவில்லை என்பது அருளரின் மனதில் நிறைந்த துக்கமாகவே இருந்தது. அந்தத் துக்கத்துடன்தான் அவர் நம்மிடமிருந்து விடைபெற்றார். இந்தத் துயரம் அருளரை இழந்த துயரத்தோடு எமக்கு இரண்டு மடங்காகின்றது. அருளருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியானது அவருடைய கனவுகளை ஈடேற்றுவதாக அமையட்டும். அந்த உறுதியோடு அவருக்கு சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு அஞ்சலி செலுத்துகிறது.

தோழர் அருளருக்கு எமது சிரம்தாழ்ந்த இறுதி வணக்கம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here