பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை அரை நிர்வாணப் போராட்டம்

தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சிலர் நடிகைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், பயன்படுத்தியும் வருவதைக் கண்டித்து தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, திரைப்பட அலுவலம் முன் இன்று அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட அலுவலகத்துக்கு வந்தார். திடீரென தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாணக் கோலத்தில் அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தன்னையும், சக நடிகைகளையும் சில இயக்குநர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சிப்பதையும், பாலியல் ரீதியாக பயன்படுத்த முயல்வதையும் கண்டித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கோஷமிட்டார். இதனால் அந்த இடத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் விரைந்து வந்து, நடிகை ஸ்ரீ ரெட்டியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நடிகை ஸ்ரீ ரெட்டி கூறுகையில், என்னிடம் சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முறையற்ற வகையில் அணுகுகிறார்கள், வாய்ப்புக் கேட்டு செல்லும்போது, முறையற்ற புகைப்படங்களை கொடுத்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று மிரட்டுகிறார்கள். இதே நிலைமைதான் சக நடிகைகளுக்கும் நடக்கிறது.

தெலுங்கு திரை உலகில் சில முன்ணனி நடிகர்களும், இயக்குநர்களும் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இதற்காக நடிகைகளுக்கு மனரீதியான அழுத்தத்தை கொடுக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்தில் பிறந்து, தெலுங்கு பேசும் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தெலுங்கு திரைப்பட சங்கத்தில் என்னை உறுப்பினராக சேர்க்க வேண்டும். நான் இதுவரை 3 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பதற்கு வாய்ப்பு தேடிச்சென்றால் என்னை தவறான கண்ணோட்டத்தில் இயக்குநர்கள் அணுகிறார்கள். பெண்கள் வாழ்க்கை விளையாட்டுப்பொருளா?. நான் ஜனநாயக முறையில்தான் போராட்டம் நடத்தினேன். எந்தவிதத்திலும் யாரையும் என் போராட்டம் பாதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அதேசமயம், பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்டவிசாரணைக்கு பின், நடிகை ஸ்ரீ ரெட்டி எந்தவிதமான புகாரும் அளிக்கவில்லை என பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நடிகை ஸ்ரீ ரெட்டியின் புகார் அடிப்படை ஆதாரமற்றது, எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று தெலுங்கு நடிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த வாரம் பேஸ்புக்கில் நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், ஒரு இயக்குநர் தன் வீட்டுக்கு அருகே காரில் சுற்றிவருகிறார். வீடியோ கோல் செய்து தனக்கு தொந்தரவு அளித்து வருகிறார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here