சுதந்திரம், திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைதீவும் ஆதரவாக இருக்கும்


மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் நேற்று (050 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷக்கு மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் சார்பாகவும் வெளிவிவகார அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் தற்போதைய முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பிராந்திய கூட்டுறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர், “எனது நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அங்கு அரசியல் நிலைமை ஸ்திரமாக உள்ளது. ஆளும் கூட்டணி பலமாக உள்ளது“ என தெரிவித்தார். இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு மற்றும் பிராந்திய கூட்டுறவு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தெரிவித்தார். இத்தகைய கூட்டுறவின் ஊடாகவே போதைப்பொருள் பிரச்சினை இளைஞர்கள் தீவிர சிந்தனையின்பால் செல்வதை முடியுமான அளவு கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய முதலீடுகளுக்கு இலங்கை சீனாவிற்கு மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் திறந்தே உள்ளது எனக் குறிப்பிட்டார்.

பொருளாதார மேம்பாட்டிற்காக இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமானதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதியும் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சரும் உடன்பட்டனர். இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவை இலங்கைதான் 70களின் ஆரம்பத்திலேயே முன்வைத்ததென ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

மாலைத்தீவின் தூதுவர் ஒமர் அப்துல் ரசாக் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here