கல்முனை நகர்- நாவிதன்வெளி யை இணைக்கும் கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியது! (PHOTOS)


அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளம் பாய்ந்து வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொலனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதே வேளை அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 04 ஆயிரத்தி 342 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்தி 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 68 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 449 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்தி 449 நபர்களும், காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 181 நபர்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 05 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here