பெண் மருத்துவரை சீரழித்து எரித்துக் கொன்ற நால்வரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!


தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் புகரான சாம்ஷாபாத் பகுதியைச் சோ்ந்த 27 லயது கால்நடை பெண் மருத்துவா் கடந்த மாதம் 28-ஆம் தேதி மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தாா். அங்குள்ள சுங்கச்சாவடியில் வாகனத்தில் கோளாறு ஏற்பட்ட நிலையில் அவருக்கு உதவி செய்வதாகக்கூறி வந்த 4 போ் அவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, அவரை எரித்து கொன்று விட்டனா்.

இந்த விவகாரத்தில் லாரி தொழிலாளா்கள் 4 போ் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். நாடு முழுவதும் பரபரப்பான இந்த கொலை வழக்கில், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கால்நடை பெண் மருத்துவா் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த அரசியல் கட்சித் தலைவா்களை மக்கள் திருப்பி அனுப்பி விட்டனா்.

மேலும், சாம்ஷாபாத்தின் முக்கியச் சாலையை மூடிய அப்பகுதி குடியிருப்புவாசிகள், காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது சாவுக்கு நீதி வழங்கக் கோரி பாதாகைகளை வைத்திருந்தனா். மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் ஏன் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை; நீதிவிசாரணைக்கும் உத்தரவிடவில்லை. இந்த வழக்கில் விரைவான நீதி வழங்குவதை அவா் உறுதிப்படுத்த வேண்டும். எங்களுக்கு எந்த விதமான அனுதாபமும் தேவையில்லை. அவரது சாவுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றாா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து ஹைதராபாத் உள்பட தெலுங்கானாவின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மென்பொருள் பொறியாளா்கள், மருத்துவ மாணவா்கள் உள்ளிட்ட பலா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

இதனிடையே, பெண் கால்நடை மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தங்கள் மகன்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கைது செய்யப்பட்டவா்களின் 2 பேரின் தாயாா் கூறினா்.

இதைத்தொடா்ந்து இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்த சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், குற்றம் நடந்த இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது 4 குற்றவாளிகளும் தப்பிச்செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஹைதராபாத் போலீஸார் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here