நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு


அவ்வை சண்முகி படத்தில் நடிகர் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். பிரிந்து சென்ற மனைவியின் வீட்டில் வேலைக்கார பெண்ணாக இருந்து, தனது மகளை கவனித்துக் கொள்வது போன்று அவரது கதாபாத்திரம் அமைந்து இருக்கும்.

அதே போன்று மதுரையிலும் ஒருவர் பெண் வேடமிட்டு சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

அவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகும். வயது சுமார் 40 இருக்கும். ஊரில் அவரது உடை லுங்கி, சட்டை. தினமும் ஊரில் இருந்து பஸ்சில் அவர் மதுரைக்கு வந்து, காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மறைவான ஓர் இடத்துக்கு செல்கிறார்.

அங்கு லுங்கி, சட்டையை களைந்துவிட்டு, சேலை, ஜாக்கெட் அணிந்து, தலையில் விக் வைத்து பெண் வேடத்தில் வெளியே வருகிறார்.

கமல்ஹாசனின் அவ்வை சண்முகி கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தும் அவர், ஒன்றிரண்டு அல்ல 3 வீடுகளுக்கு சென்று பாத்திரங்கள் தேய்ப்பது, சுத்தப்படுத்துவது என்று வேலைகளை முடித்துவிட்டு, மாலையில் மீண்டும் அதே இடத்துக்கு வந்து, தலையில் இருந்து ‘விக்கை’ கழற்றிவிட்டு மீண்டும் லுங்கி, சட்டையை அணிந்துகொண்டு, தனது ஊருக்கு புறப்படுகிறார்.

அவர் ஆணாக சென்று உடை மாற்றிவிட்டு, பெண்ணாக உருமாறி வருவதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் கண்டுபிடித்துவிட்டனர். எனவே அவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவரது உண்மையான பெயர் ராஜா என்பது தெரியவந்தது. மேலும் தான் வேலை செய்யும் இடங்களில் தனது பெயரை ராஜாத்தி என கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

மானாமதுரையில், எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் வயதான பெற்றோரை காப்பாற்ற முடியாமல் வேதனைபட்டேன். எனவே பெண்ணாக மாறினால் வேலை கிடைக்கும் என எண்ணினேன். பெண் வேடமிட்டு சொந்த ஊரில் வேலை செய்தால் கேலி, கிண்டலுக்கு ஆளாகலாம் என நினைத்து, கடந்த 6 மாதத்துக்கு முன்பு மதுரைக்கு வந்து பெண் வேடமிட்டு வேலைதேடினேன்.

என்னை பெண் என்று நினைத்து 3 வீட்டில் வேலைக்கு சேர்த்தனர். அங்கு வீட்டு வேலைகளை செய்து விட்டு மாலையில் மீண்டும் ஊருக்கு சென்று விடுவேன். இதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் நான் எனது பெற்றோரை காப்பாற்றி வருகிறேன்.

நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு சிலருக்கு நான் பெண்ணாக மாறி ஏமாற்றுவது போல் தோன்றலாம். ஆனால் வயதான பெற்றோரை காப்பாற்ற எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை. நான் வேலை பார்க்கும் இடங்களில் இதுநாள் வரை என் நடவடிக்கையில் சந்தேகப்படவில்லை. மேலும் எனது பேச்சு, நடவடிக்கைகள் பெண்கள் சாயலிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.

நான் வேலை பார்த்து வந்த வீட்டினருக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஒருநாள் இந்த மோசடி எப்படியும் எனக்கு வேலை தரும் வீட்டினருக்கு தெரிந்துவிடும் என்பது எனக்கு தெரியும். அப்படி தெரிந்துவிட்டால், என் நிலையை அறிந்து அவர்கள் என்னை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு ராஜா உருக்கமுடன் கூறியுள்ளார்.

இதற்கிடையே ராஜா உடை மாற்றிவிட்டு, பெண்ணாக வலம் வரும் காட்சிகள் ஊடகங்களில் நேற்று வெளியாகின.

எனவே இந்த விவகாரம் போலீசாரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. மதுரையிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here