மேடையில் சொன்னதை செய்து காட்டுங்கள்!


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்று தருவதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மேடையில் வழங்கிய வாக்குறுதியை அவர் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்

நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் மலையக பெருந்தோட்ட மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு முழுமையாக வாக்களிக்கா விட்டாலும் கனிசமான அளவு வாக்குகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களித்து அவரின் வெற்றியில் மலையக பெருந்தோட்ட மக்களும் பங்காளிகளாக இருக்கின்றார்கள்.

எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியில் பங்காளிகளாக இருக்கும் மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு பிரச்சனையிலும் அவர்களின் வாழ்வாதார பிரச்சனையிலும் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் புதிய பிரதமரும் நிதியமைச்சருமாமான மஹிந்த ராஜபக்ஷவும் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த அரசாங்கத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்களை எந்தளவிற்கு ஏமாற்ற முடியுமோ அந்த அளவிற்கு ஏமாற்றியுள்ளார்கள். ஐம்பது ரூபா சம்பள உயர்வு பெற்று தருவதாக கூறினார்கள். ஐம்பது சதம் கூட பெற்று தரமுடியல்லை வீடுகள் அமைத்து கொடுத்தார்கள.; அந்த வீடுகள் ஒரு காற்று மழைக்கு கூட தாக்கு பிடிப்பதில்லை. கூரைகள் எல்லாம் காற்றில் பறக்கின்றன. இது இவ்வாறு இருக்க கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாஸ அவர்கள் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பொழுது தேர்தலில் வெற்றி பெற்றால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுப்பதாக மேடைகளில் கூறினார். அவர் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருக்கும் பொழுதே ஐம்பது ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடியாத சஜித் பிரேமதாஸ எவ்வாறு 1500 ரூபா பெற்றுக் கொடுக்கப் போறார் ? என நினைத்த மலையக பெருந்தோட்ட மக்கள் இதுவும் ஏமாற்றும் வாக்குறுதியென நினைத்து மலையக பெருந்தோட்ட மக்கள் பெரும்பாலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்தனர்.

எனவே பெருந்தோட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தற்பொழுது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் உள்ளது. நான் இது தொடர்பான கோரிக்கை மகஜர் ஒன்றையும் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்விடம் அவரின் காரியாலயத்தில் கையளித்துள்ளேன். அவரும் சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனி நிர்வாகத்துடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடாத்தி ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

எனவே வெகுவிரைவில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்குமென நான் நம்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here