தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க முயற்சி!


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் கூட்டாக களமிறங்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன் முயற்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய, சிறுபான்மையினங்களின் முக்கிய கட்சிகள் கூட்டணியாக செயற்பட கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது.

தற்போதைய நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இது குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வீட்டு சின்னத்திலும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் மரச்சின்னத்திலும் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு கிழக்கிற்கு வெளில்- குறிப்பாக கொழும்பில்- கூட்டாக களமிங்குவது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த 19ம் திகதி நடந்த முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயிர்பீட கூட்டம் நடந்தபோது, சிறுபான்மை கட்சிகளின் கூட்டமைப்பு குறித்து கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இந்த கூட்டணி யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கு, ரவூப் ஹக்கீம் சாதகமாக பதிலளித்துடன், பேச்சு முயற்சிகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here