பிணையில் வந்தார் சல்மான் கான்!

கலைமான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இரண்டு இரவுகளை சிறையில் கழித்தபின் அவர் ரூ.50 ஆயிரம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் விமானத்தில் மும்பை செல்கிறார்.

1998ஆம் ஆண்டு மானை வேட்டையாடிய வழக்கை விசாரித்து வந்த ஜோத்பூர் நீதிமன்றம், ஏப்ரல் 5ஆம் திகதியன்று 201 பக்க தீர்ப்பை வழங்கியது.

வனப் பாதுகாப்பு சட்டத்தை சல்மான் கான் மீறியதாக அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து பிணை கோரி சல்மான் கான் மனு தாக்கல் செய்திருந்தார்.

வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் அதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையில் பிணை வழங்கியுள்ளது.

20 ஆண்டு கால வழக்கு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மானான ‘கலைமானை’ வேட்டையாடியதாக சல்மான் கானுடன் மேலும் 4 நடிகர் நடிகைகள் மீது 1998ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலைமான் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு மான் இனமாகும்.

‘ஹம் சாத் ஹெய்ன் ஹெய்ன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோத்பூர் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக என்று கூறப்படுகிறது.

சல்மான் கானுடன் நடிகர் சயிஃப் அலி கான் மற்றும் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோருடைய பெயர்களும் இருந்தன.

சல்மான் கானை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், மற்ற நால்வரையும் விடுவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here