மயிரிழையில் முதலிடத்தை இழந்த ஸ்மித்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளில், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை முடிந்து மீண்டும் டெஸ்ட் போட்டி விளையாட வந்த பின் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தர வரிசையில் கோலியின் முதலிடத்தைக் காலி செய்து முதலிடம் பிடித்தார். இப்போது அவரைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் கோலி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கொல்கத்தாவில் பங்களாதேஷூக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது, விராட் கோலி 136 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக டெஸ்ட் தர வரிசையில் 928 புள்ளிகள் பெற்று கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்மித் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்கோர் செய்யாததால் தர வரிசையில் முதலிடத்தைத் தக்க வைக்க முடியாமல் 2வது இடத்துக்கு 923 புள்ளிகளோடு சரிந்தார்.

ஆனால், விராட் கோலி தர வரிசையில் முதலிடத்தை நீண்டநாள் தொடர வாய்ப்பில்லை. ஏனென்றால் டிசம்பர் மாதம் வரை இந்திய அணி எந்தவிதமான டெஸ்ட் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. ஜனவரி மாதம் நியூஸிலாந்து சென்றுதான் விளையாட உள்ளது. அதுவரை டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்க மாட்டார்.

ஆனால், அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க உள்ள நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளில் ஸ்மித் சிறப்பாக ஆடி முதலிடத்தைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. தற்போது கோலிக்கும், ஸ்மித்துக்கும் இடையே 5 புள்ளிகள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. ஆதலால் எளிதாக முதலிடத்தை ஸ்மித் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், வரும் காலத்தில் ஸ்மித்துக்கும் கோலிக்கும் இடையே தர வரிசையில் முதலிடத்தைப் பிடிப்பதில் தொடர்ந்து போட்டிகள் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் முச்சதம் அடித்ததால், தர வரிசையில் 12 புள்ளிகள் உயர்ந்து, ரொப் 10 வரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல அவுஸ்திரேலிய வீரர் லாபுசாங்கே பாகிஸ்தானுக்கு எதிராகச் சதம் அடித்ததால், தர வரிசையில் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தர வரிசையில் 110வது இடத்தில் இருந்த லாபுசாங்கே, தற்போது 8வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3, இந்திய வீரர் சட்டேஸ்வர் புஜாரா 4வது இடத்தில் நீடிக்கிறார். ரஹானே 6ம் இடம். நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த இங்கிலாந்து கப்டன் ஜோ ரூட் தர வரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 9ம் இடத்தில் நியூசிலாந்தின் ஹென்ரி நிக்கோலஸ், 10ம் இடத்தில் இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன இடம்பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஷம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததால், தர வரிசையில் 2 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்துள்ளார்

பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து அவுஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் (900) நீடிக்கிறார். ரபாடா இரண்டாமிடத்திலும், ஹோல்டர் மூன்றாமிடத்திலுமுள்ளனர். வக்னர் 5ம் இடம், பும்ரா 5ம் இடம், பிலாண்டர் 6ம் இடம், அண்டர்சன் 7ம் இடம், ஹேசில்வூட் 8ம் இடம், அஸ்வின் 9ம் இடம், முகமது சமி 10ம் இடத்தையும் பிடித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here