இராணுவ ஆட்சியை மறைக்கவா கோட்டாவின் எளிமையான வாழ்க்கை நாடகம்?: ராஜித!

அண்மையில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் மிகவும் அச்சமடைந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்து, அவருடைய குடும்பத்தாருடன் கூட பேசமுடியாத நிலையில் இருக்கின்றார். அவ்வாறிருக்க அவர் வந்து வாக்குமூலம் வழங்கவேண்டும் என்று அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கின்றது. அவரால் எவ்வாறு வாக்குமூலம் அளிக்க முடியும்? என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் தவறான பாதையில் பயணிப்பதற்கு முற்படுமாக இருந்தால், 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரைப் போன்று நாடு சர்வதேசத்தின் மத்தியிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், தற்போதைய பொருளாதார நிலைவரத்தின் பிரகாரம் கடுமையான நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எமது நல்லாட்சி அரசாங்கத்தில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், நாங்கள் நாட்டில் ஜனநாயகத்தையும் மக்களின் மனித உரிமைகளையும் வலுப்படுத்தினோம். ஜனநாயகக் கட்டமைப்புக்களான நீதிமன்றம், பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றின் சுயாதீனத்துவத்தை வலுப்படுத்தினோம்.

அத்தோடு, தேர்தலுக்கு முன்னர் வெள்ளை வேன் தொடர்பான தகவலொன்றை நான் வெளியிட்ட போது, அது பொய் என்று பலரும் சாடினார்கள். ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒருவார காலத்திலேயே வெள்ளை வேன் வந்துவிட்டது. கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருக்கிறார். அதனால் மிகுந்த அச்சமடைந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவருடைய குடும்பத்தாருடன் கூட பேசமுடியாத நிலையிலேயே பாதிக்கப்பட்ட ஊழியர் இருக்கின்றார். அவ்வாறிருக்க அவர் வந்து வாக்குமூலம் வழங்கவேண்டும் என்று அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கின்றது. அவரால் எவ்வாறு வாக்குமூலம் அளிக்க முடியும்?

அதேபோன்று இனியும் இங்கு பாதுகாப்பில்லாத நிலையில் அவரையும், அவரது குடும்பத்தாரையும் சுவிஸர்லாந்திற்கு அனுப்புவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அடுத்ததாக ஊடக நிறுவனங்கள் சோதனையிடப்படுவதுடன், ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். நான் பல வருடங்களுக்கு முன்னர் 4 ஆம் மாடிக்குச் சென்றிருக்கிறேன். அங்கு காணப்படும் சூழ்நிலை எத்தகையது என்பதை நன்கு அறிவேன். அவ்வாறிருக்க உண்மையில் விசாரணை நடத்தும் நோக்கம் எதுவுமின்றி, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்காக அங்கு அழைத்துச்சென்று பலமணிநேரங்கள் தடுத்துவைத்திருக்கிறார்கள்.

புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி அணிகின்ற ஆடைகளின் சாதாரண தன்மை, தனக்கான பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தமை போன்ற சாதாரண இயல்புத்தன்மை வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போது முன்னெடுக்கின்ற மேற்படி செயற்பாடுகளை மறைப்பதற்கான ஒரு போர்வையாக அவர் இத்தன்மையைப் பயன்படுத்துகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கும் அடுத்ததாக ஏற்கனவே ஜனாதிபதி கூறியது போன்று ஒரு முன்மாதிரியான அரசாங்கத்தை அமைப்பாராக இருந்தால் நாங்கள் அதனை வரவேற்கின்றோம். ஆனால் அதைவிடுத்து ஒரு இராணுவ ஆட்சியை ஸ்தாபிப்பதற்கு முற்படுவாராயில் அது நாட்டிற்கு உகந்ததல்ல என்பதுடன், சர்வதேசத்தின் மத்தியில் காணப்படும் எமது நாட்டிற்குரிய ஏற்புடைமைத்தன்மையும் இல்லாது போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here