காட்டிலிருந்து வந்த புலியும்… நகரிலிருந்த காட்டுமிராண்டித்தனமும்!

இன்று கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தையொன்று பொறுப்பற்ற விதத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. அந்த சிறுத்தையை அடித்து கொன்ற பொதுமக்களிற்கு காட்டுயிர்கள் பற்றியோ, காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வு பற்றியே போதிய விழிப்புணர்ச்சிகள் இல்லாமல் இருக்கலாம்.

எனினும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்புணர்வற்ற தன்மை இதில் வெளிப்பட்டுள்ளது.

சிறுத்தை காலை 6.30 மணியளவில் மக்கள் குடியிருப்பிற்குள் காணப்பட்டது. அது கொல்லப்படும் போது மதியம் 12.30.

இடைப்பட்ட ஆறு மணித்தியாலத்திற்குள் சிறுத்தையை கிராமத்தை விட்டு அப்புறப்படுத்த முடியாத செயலற்ற நிலையிலா வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளது?

வடக்கில் பல இடங்களிலும் காணி பிடிப்பதில் வன ஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த திணைக்களத்தின் அதிகாரியொருவர் பிஸ்டலை காட்டி தன்னை அச்சுறுத்தியதாக சிறிதரன் எம்.பி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது பிரதேசங்களை எல்லையிடுவதில் காட்டும் அக்கறையையும், செயல்திறனையும் மிருகங்களை பாதுகாப்பதில் செலுத்துவதில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு மணித்தியாலம் மக்கள் குடியிருப்பிற்குள் நின்ற சிறுத்தையை மயக்க ஊசி மூலமோ, வலை போட்டோ பிடித்து பாதுகாப்பாக அகற்ற முடியவில்லையென்றால், உண்மையிலேயே வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொழில் நேர்த்தி குறைவையே காண்பிக்கிறது.

வனஜீவராசிகள் திணைக்களம்தான் இப்படியென்றால், கிராமத்தவர்களிற்கு காட்டுயிர்கள் தொடர்பான பொறுப்புணர்வு ஏன் இல்லாமல் போனது?

வழிதவறி வந்த சிறுத்தையை சுற்றிவளைத்து கலவரமூட்டினால், அச்சத்தில் அது தாக்கவே செய்யும்.

காடுகள் சுருங்கி, காட்டுயிர்களின் வாழிடங்கள் இல்லாமல் போய்விட்டது. கடுமையான நீர்ப்பஞ்சம் வேறு வாட்டுகிறது. காட்டின் எல்லை கிராமங்களிற்குள் காட்டுயிர்கள் படையெடுப்பதை தவிர்க்க முடியாது. ஏனெனில், அந்த உயிரினங்களின் வாழிடங்களையே நாம் ஆக்கிரமித்துள்ளோம்.

மிகப்பெரிய இந்த வகையான சிறுத்தைகள் வன்னி காடுகளில் மிக அரிதானவையாகவே இருக்கும். விரல் விட்டு எண்ணத்தக்களவானவைதான் இருக்கும். காட்டுயிர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் குறுக்கறுத்து, அவற்றின் வாழிடங்களை அழித்து, அவற்றிற்கு வாழ்க்கை நெருக்கடியை கொடுத்ததுமல்லாமல், வழிதவறி வரும் காட்டுயிர்களை எப்படி அணுகுவதென்பதை தெரியாமல் இருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சியான செய்தி!

சிறுத்தையை அடித்து கொன்று விட்டு, அத்துடன் செல்பி எடுத்த இளைஞர்கள் அனேகர். உயிரிழந்த நிலையிலோ, குற்றுயிரான நிலையிலோ, அந்த சிறுத்தையை கொடுமைப்படுத்தும் இளைஞர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது. காட்டுயிர்கள் தொடர்பாக ஒரு துளியும் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் இல்லாத ஒரு இளைஞர் சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பது… நமது சமூக உருவாக்கத்தையே கேள்விக்குட்படுத்துவது.

இந்த பூமியில் பொறுப்புணர்வுடன் வாழும் இனமாக தமிழர்கள் இன்னும் பரிணமிக்கவில்லையென்பது மட்டும் கிளிநொச்சி சம்பவத்தின் மூலம் வெளிப்படுகிறது.

இளைஞர்களின் பொறுப்பற்ற தனம். வீடியோவை பார்க்க இங்கு அழுத்தவும்.


இரண்டு எதிர்வினைகள்

காட்டிலிருந்து ஒரு சிறுத்தை
நாட்டுக்கு வருகிறது என்றால்
ஓராயிரம் பாலை மரங்களும்
ஓராயிரம் தேக்கு மரங்களும்
ஓராயிரம் முதிரை மரங்களும்
கொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு பேராற்றின் குடும்பமே
இறந்துவிட்டது என்று அர்த்தம்
பத்தாயிரம் பறவைகள்
கடல்கடந்து பறந்துவிட்டன என்று அர்த்தம்
நூறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும்
ஆயிரமாயிரம் தேனீக்களும்
செத்துப்போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு போகமல்ல
பல போகங்கள்
பொய்க்கப்போகின்றன என்று அர்த்தம்

மோப்பம் பிழைத்து
வழிதவறி
வந்த அச்சிறுத்தையை கொன்ற நாங்கள்
எங்களுடைய குடும்ப
குழந்தைகளையும் பெண்களையும்
உயிரோடு
கொளுத்திக் களித்தோமென்று அர்த்தம்

– நட்சத்திரன் செவ்விந்தியன்

Gowripal Sathiri Sri

இலங்கையில் புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் யுத்தம் தொடங்கியவேளை புலிகளின். 3 ம் இலக்க முகாமில் ஒரு சிறுத்தை குட்டியும் இருந்தது. புலிகள் பின்வாங்கி சென்று கொண்டிருந்தபோது அதனையும் காவிக்கொண்டே சென்றனர். சங்கானைக்கும் சண்டிலிப்பாய் பகுதிக்குமிடையில் திடீரென இந்திய இராணுவத்தோடு மோதல் தொடங்கிவிட. சிறுத்தை மிரண்டு ஓடி விடாமலிருக்க ஒரு சாக்கு பையில் போட்டு கட்டி வைத்து விட்டு சண்டை நடந்தது. பல மணிநேரம் நீண்ட சண்டையில் ஒரு போராளி இறந்தும் செல்வராசா வாத்தி காயமடைந்து போக. இறந்த போராளியின் உடலையும். காயமடைந்தவர் சிறுத்தை குட்டி எல்லாவற்றையும் தூக்கி கொண்டு முற்றுகையை உடைத்து புலிகள் அளவெட்டி பக்கம் போனதும் போராளியின் உடலை புதைத்து விட்டு சிறுத்தைக்கு உணவு கொடுக்க சாக்கு பையை அவிழ்த்தபோது மிரண்டு போயிருந்த சிறுத்தை பலரை விறாண்டி கடித்தும் விட்டது.அதை சுட்டு கொன்றுவிட. ஒரு செக்கன் போதுமானது. ஆனால் அதனை பிடித்து மீண்டும் சாக்கு பையில் போட்டுவிட்டு தொடர்ந்தும் அதனை காவிக்கொண்டு பயணிக்க முடியாது என்பதால் பற்றை காடும் பனை மரங்களும் அதிகமாக இருந்த விளான் பகுதியில் அதனை கொண்டு போய் விட்டு விட்டார்கள். சில காலத்தின் பின்னர். “பிரபாகரன் வளர்த்த செல்லப் பிராணி தெல்லிப்பழையில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம் என்று இராணுவ அதிகாரி தெரிவித்தார்.” என்று அந்த சிறுத்தை குட்டியின் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அன்றிரவே தெல்லிப்பழையில் இந்திய இராணுவம் மீது தாக்குதலும் நடந்தது …இன்று கிளி நொச்சியில் அடித்துக் கொல்லப்பட்ட சிறுத்தைக்குட்டியின் படத்தை பார்த்தபோது அந்த சம்பவம் நினைவுக்கு வந்து தொலைத்தது ..

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here