ஐ.தே.கவின் கிளையிலிருந்து வெளியேறுகிறோம்… தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளிற்காக புதிய அரசியல் இயக்கம்; சிறிகாந்தா அதிரடி அறிவிப்பு!


இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் முன்னெடுக்கப்பட்ட தமிழினத்தின் தேசிய விடுதலை எழுச்சி, மழுங்கடிக்கப்பட கூடாது என்பதற்காக, தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளை, ஜனநாயக வேட்கையை நிலைநிறுத்த புதியதொரு அரசியல் இயக்கத்தை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கிறோம் என அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா.

இன்று (2) யாழில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஐதேகவின் கிளையாக, தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசுக்கட்சியை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்ப  அனுப்ப தயாராக இருக்கிறோம் என்றும் சூளுரைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதென நாம் முடிவெடுத்திருந்தோம். கட்சியின் முடிவை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட என் மீதும், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர், துணை செயலாளர் ஆகியோருக்கு ஒழுங்கு நடவடிக்கை கடிதம் கட்சியால் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசுகட்சி ஜனாதிபதி தேர்தலிற்கு இரு வாரங்களின் முன்னர் அவசரஅவசரமாக மத்தியகுழு கூட்டத்தை கூட்டி, ஐ.தே.கவை ஆதரிப்பதென முடிவெடுத்தார்கள். நான்கு நாட்களின் பின் ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்திலும், என் போன்றவர்களின் எதிர்ப்பை மீறி, சஜித்தை ஆதரிபபதென முடிவானது.

கோட்டாபயவையோ, சஜித்தையோ ஆதரிக்க முடியாதென தலைமைக்குழு கூட்டத்தில் விளக்கமளித்திருந்தேன். தமிழர்களின் சார்பில் ஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட 13 அம்ச கோரிக்கைகளை தொட்டுகூட பார்க்க தயாராக இல்லாத நிலையில், அவர்களிற்கு ஆதரவளிக்க முடியாதென குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், தமிழ் அரசு கட்சியை பின்பற்றி, சஜித்தை ஆதரிப்பதென ரெலோ தீர்மானித்தது. அதை ரெலோவின் யாழ் மாவட்ட குழு ஆராய்ந்த பின் புறக்கணித்து, சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதென முடிவெடுத்தோம். தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தி சுயேட்சையாக அவர் போட்டியிட்டிருந்தார். அவரை ஆதரித்தமைக்காக எம் மீது இப்பொழுது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக கிஞ்சித்தும் நாம் கவலைப்படவில்லை.

தமிழ் அரசுக்கட்சியின் எடுபிடியாக ரெலோ நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த இயக்கத்தில் நாம் அங்கம் வகிக்க முடியாதென்பதை நாம் பரிபூரணமாக உணர்கிறோம். நாம் மூவர் மட்டுமல்ல, ரெலோவின் யாழ் மாவட்ட கிளையின் தீவிர செயற்பாட்டாளர்களான 80 வீதமான உறுப்பினர்கள் ரெலோவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளோம். மிகுதி 20 வீதமானவர்களில் விரல் விட்டு எண்ணத்தக்க ஒருசிலரை தவிர்த்து, ஏனையோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உள்ளூர் ஆட்சிசபைகளின் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் இருக்கும் இடங்களிலேயே இருக்கலாம். அவர்களின் இதயங்களும் எங்களின் முடிவோடு இணைந்துள்ளது.

இரத்தத்தால் ், வியர்வையால், கண்ணீரால் முன்னெடுக்கப்பட்ட தமிழினத்தின் தேசிய விடுதலை எழுச்சி, மழுங்கடிக்கப்பட கூடாது என்பதற்காக, தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளை, ஜனநாயக வேட்கையை நிலைநிறுத்த புதியதொரு அரசியல் இயக்கத்தை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கிறோம் என்பதை அறிவிக்கிறோம்.

வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வடக்கு கிழக்கிற்கு வெளியிலிருந்தும் பலர் எமது முடிவை ஆதரிக்கிறார்கள்.

வெளிநாடுகளிலுள்ள பெரும்பாலான ரெலோ உறுப்பினர்கள் எம்மை ஆதரிக்கிறார்கள். இந்த பலத்துடன், வலுவோடு இன்னும் இரண்டு வாரத்தில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிப்போம்.

ஐதேகவின் கிளையாக, தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசுக்கட்சியை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்ப  அனுப்ப, தமிழ் தேசிய அரசியல் பரப்பில், தமிழ் தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தி நிற்கும் அனைத்து அரசியல் ஜனநாயக கட்சிகள், அமைப்புக்களை ஓரணியில் திரட்டி, தமிழினத்திற்கு தகுதியான, நேர்மையான, உண்மையான, ஏமாற்றாத நல்லதொரு அரசியல் இயக்கத்தை உருவாக்கிக் கொடுக்கும் நல்லதொரு அரசியல் தலைமையை உருவாக்கிக் கொடுக்க எங்களின் வகிபாகத்தை நாங்கள் உறுதியோடு நிறைவேற்றுவோம்.

இரண்டு வாரத்தில் எமது புதிய அரசியல் இயக்கத்திதை அங்குரார்ப்பணம் செய்யும்போது, கொள்கை விளக்கம் பற்றி அறிவிப்போம். அதன் பின் தமிழ் தாயகத்தில், தமிழீழத்தில் எமது அரசியல் நடவடிக்கை ஆரம்பிக்கும்.

எந்த கோட்டாபய ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டுமென்றார்களோ, இருண்ட யுகம் வருமென்றார்களோ, அதே தமிழ் அரசுக்கட்சி தலைவர்கள், கோட்டா வெற்றிபெற்றதும் அவருடன் இணைந்து செயற்பட தயாரென வெட்கம் கெட்ட தனமாக, கூச்சநாச்சமின்றி தெரிவிப்பது, எத்தகைய அரசியல் தலைமையை தமிழரசுக்கட்சி தமிழர்களிற்கு வழங்கியிருக்கிறதென்பதும், அந்த தலைமைக்கு எடுபிடியாக இருப்பவர்களையும் தமிழ் மக்களிற்கு தெளிவாக காட்டியுள்ளது. இதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். நாமும் அனுமதிக்க மாட்டோம். விரைவில் அரசியல், ஜனநாயக ரீதியில் நாங்கள் முடிவுகட்டுவோம்.

இலங்கைத்தீவுக்குள் தமிழினம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தனது தாயகத்தில் சுயாட்சி அரசியல் நிர்வாக ஏற்பாடுகளுடன் இணைப்பாட்சி முறையை ஏற்படுத்தவும், வடக்கு கிழக்கில் வெளியில் வாழும் மக்கள் தமது அரசியல் உரிமையை நிலைநாட்ட, நாம் அமைக்கும் புதிய கட்சி செயற்படும்.

யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில்மெல்லமெல்ல திட்டமிட்டு ஆதிக்கம் செலுத்திய தமிழரசுக்கட்சி இப்போது நேர்மையீனமாக, சர்வாதிகாரமாக, தனது சுயநலத்திற்கு இசைவாக திசைதிருப்பியிருக்கிறது. ஒரு தீமையை நாங்கள் அனுமதிக்க முடியாது. இதை நாங்கள் ரெலோவிற்குள் இடித்துரைத்தபோது, செல்வம் அடைக்கலநாதனும் இதை ஏற்றுக்கொண்டார். ரெலோவின் கடந்த மூன்று தலைமைக்குழு கூட்டங்களிலும், தமிழரசுக்கட்சியின் அடாவடி, சர்வாதிகார போக்கை தொடர்ந்து சகிக்க முடியாது, கூட்டமைப்பில் நீடிக்க முடியாது, மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டுமென தம்பி செல்வம் அடைக்கலநாதனே சொன்னார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்திற்குள் பேசிக்கொண்டதற்கு அமைய, தமிழனத்திற்கு தமிழ் அரசு கட்சி தவிர்ந்த தமிழ் தேசிய கட்சிகள், அமைப்புக்களை ஓரணியில் திரட்டி, உரிய தலைமை வழங்கலாமென நாம் உறுதியாக நம்புகிறோம் என்றார்.

இதன்போது ரெலோவின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்ரர், முன்னாள் துணை அமைப்பாளர் ஜனார்த்தனன் ஆகியோரும் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here