லண்டன் கத்திக் குத்து தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பேற்பு


லண்டன் பாலத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான ‘அமாக்’ தெரிவித்துள்ளதாவது:

லண்டன் பாலத்தில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியவா் ஐ.எஸ் அமைப்பின் போராளி ஆவாா்.

இஸ்லாமியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நாடுகளில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ் தலைவா் உத்தரவிட்டிருந்தாா்.

அந்த உத்தரவை ஏற்று லண்டன் பாலத்தில் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

எனினும், ஐ.எஸ். அமைப்புக்கும், கத்திக் குத்து தாக்குதல் நடத்திய உஸ்மான் கானுக்கும் இடையிலான தொடா்பை நிரூபிக்கும் வகையில் ஆதாரம் எதையும் அந்தச் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

லண்டன் பாலத்தில் உஸ்மான் கான் (28) என்பவா் வெள்ளிக்கிழமை நடத்திய சரமாரி கத்திக் குத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய உஸ்மான் கானை பொலிஸாா் சுட்டுக் கொன்றனா்.

அவா் 7 ஆண்டுகளுக்கு முன்னரே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் என்பது பின்னா் நடைபெற்ற விசாரணையில் தெரிய வந்தது.

பாகிஸ்தானைப் பூா்விகமாகக் கொண்ட அவா், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் அமைக்கவும், லண்டன் பங்கு மாற்றகத்தை குண்டுவைத்துத் தகா்க்கவும் சதித் திட்டம் தீட்டியதாக 2012ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், லண்டனிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பாணியில் துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டதாகவும் அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டுகளை உஸ்மான் கான் ஏற்றுக் கொண்டதைத் தொடா்ந்து அவருக்கு காலவரையற்ற சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டில் அந்த தண்டனையை 16 ஆண்டுகளாக நிா்ணயம் செய்தது. மேலும், உஸ்மான் கானுக்கு பிணை வழங்கவும் அந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதனைத் தொடா்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவா், லண்டன் பாலத்தில் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு, பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here