அமேசன் காட்டில் தீவைக்க நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ நிதி அளித்துள்ளார்: பிரேசில் ஜனாதிபதி குற்றச்சாட்டு


நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ அமேசன் காட்டில் தீவைக்க நிதியளித்ததாக பிரேசில் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அமேசன் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்திற்கு ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ மீது குற்றம் சுமத்தினார்.

“லியனார்டோ டிகாப்ரியோ மிகவும் சிறந்த மனிதர். அமேசன் காடுகளில் தீ வைப்பதற்கு நிதி அளித்தவர் அவர்” என்று அவர் கூறினார்.

மேலும் சில சுய உதவி குழுக்களும் அமேசன் காடுகளில் தீ வைப்பதற்கு உதவி செய்ததாக அவர் கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

மேலும், “அமேசன் காடுகளில் ஏற்பட்ட தீயை சில தனியார் அமைப்புகள் புகைப்படம் எடுத்து வெளியிடுகின்றனர். பின்னர் லியனார்டோ டிகாப்ரியோவிடம் செல்கின்றனர். அவர் அவர்களுக்கு 5 லட்சம் டொலர்கள் கொடுக்கிறார். அதில் இருந்து ஒரு பகுதி பணம், காட்டில் தீ வைப்பவர்களுக்கு போய் சேர்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.

பிரேசில் ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டை நடிகர் டிகாப்ரியோ மறுத்துள்ளார். தான் யாருக்கும் நிதி வழங்கவில்லை என்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க போராடுபவர்களுக்கு, தான் என்றும் ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமேசனில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க பிரேசில் ஜனாதிபதி முயற்சி எடுக்கவில்லை என்று சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது. பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 20 மில்லியன் டொலர் பணத்தை அவர் பெற்றுக்கொள்ள மறுத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here