டிசம்பர் 6, பாபர் மசூதி இடிப்பு தினம்: ‘திருநாள்’ எனக் கொண்டாடியதைக் கைவிட இந்து அமைப்புகள் முடிவு


அயோத்தியில் பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992 இல் இடிக்கப்பட்டது. அப்போது முதல் 26 வருடங்களாக ‘சவுரப் திவஸ் (திருநாள்)’ எனக் கொண்டாடி வந்ததை கைவிட இந்துத்துவா அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினர் நடத்திய கரசேவையில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்டு டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதியை இடித்தனர். அப்போது முதல் டிசம்பர் 6, இந்துக்களின் திருநாளாகக் கொண்டாடப்படும் என பஜ்ரங்தளம் அமைப்பு அறிவித்தது.

இதை அதன் சக அமைப்பான விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதிலும் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம், மசூதியை பறிகொடுத்தமையால் முஸ்லிம் அமைப்பினர் அந்நாளை ‘தியாக தினம்’, ‘உரிமை மீட்பு தினம்’ எனப் பல்வேறு பெயர்களில் போராட்டம் நடத்தி அனுசரிப்பதும் வழக்கமாக உள்ளது.

இந்த வருடம் அந்த நாள் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வருகிறது. மேலும், இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு கடந்த 9 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில் அயோத்தியின் பிரச்சினைக்குரிய 2.77 நிலம் இந்துக்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 6 அன்று முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டு வரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்துத்துவா அமைப்புகள் தமது திருநாள் கொண்டாட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளன.

அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கோயிலுக்கு சாதகமாக வந்துள்ளமையால் டிசம்பர் 6 தினத்தை இனி கொண்டாட வேண்டியதில்லை எனவும் இந்து அமைப்புகள் முடிவு எடுத்துள்ளனர்.

இது குறித்து விஎச்பியால் அமைக்கப்பட்ட ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸின் தலைவரான மஹந்த் நிருத்திய கோபால்தாஸ் கூறும்போது, ”உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோயில் கட்டப்படுவதால், டிசம்பர் 6-ம் தேதி இனி எந்தவகையான பொதுநிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என முடிவு எடுத்துள்ளோம்.

பதட்ட சூழல் உருவாகாத வகையில், அயோத்தியின் கோயில்கள், மடங்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி சமூக நல்லிணக்கத்தைப் போற்ற வேண்டும் என அனைவருக்கும் வலியுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, அயோத்தி வழக்கின் முஸ்லிம் தரப்பு மனுதாரர்களில் ஒருவரான ஹாஜி மஹபூப் சார்பில் அயோத்தியில் காலை 11 மணிக்கு வழக்கம் போல் துக்க தினம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாசுதீன் ஒவைஸிக்கு அழைப்பு

இந்த வருடம் இதில் கலந்துகொள்ள முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்கள், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹதுல் முஸ்லிமின் தலைவரான அசாசுதீன் ஒவைஸி, பாபர் மசூதி தரப்பின் வழக்கறிஞர் ஜபர்யாப் ஜிலானி உள்ளிட்ட முக்கிய முஸ்லிம் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முஸ்லிம் அமைப்புகள்

இதில், முதன்முறையாக தமிழகம் உள்ளிட்ட வேறு பல மாநிலங்களில் இருந்தும் முஸ்லிம் அமைப்புகள் அயோத்தி வந்து கலந்துகொள்ளவும் திட்டமிட்டு வருகின்றனர். இங்கு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கின் அன்றாட விசாரணை தொடங்கியதும் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு டிசம்பர் 28 ஆம் தேதி வரை அமலில் உள்ளது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here