பிரியங்கா ரெட்டி காணாமல் போன வழக்கு: எப்ஐஆர் பதிவு செய்யத் தாமதம்; புகாரைத் தட்டிக் கழித்ததாக 3 போலீஸார் சஸ்பெண்ட்


பெண் கால்நடை மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவர் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுத்தியதாக சைபராபாத் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று போலீஸார் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி (26). ஹைதராபாத் மாதப்பூர் கால்நடை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த இவரை, கடந்த புதன்கிழமை இரவு லாரி டிரைவர்கள் சிலர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்றனர். மேலும், அவரது உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றனர்.

சம்பவம் நடந்த இரவே பிரியங்காவின் பெற்றோர் 11 மணி அளவில் போலீஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அப்புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அப்போது பணியில் இருந்த ஒரு துணை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று போலீஸார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முயன்ற நேரத்தில் காணாமல் போன பெண்ணுக்கு வேறு யாருடனாவது உறவு இருக்கிறதா என்று காவல்துறையினர் கேள்வி மேல் கேட்டு நேரத்தை வீணடித்ததாக நேற்று ஹைதராபாத் வந்திருந்த தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பிரியங்கா ரெட்டி, செல்பேசியில் இருந்து தனது சகோதரியை அழைத்துப் பேசியுள்ளார். அப்போது ஷம்ஷாபாத்தில் ஒரு டோல் கேட் அருகே சிக்கித் தவித்ததாகக் கூறியுள்ளார். ஸ்கூட்டி பஞ்சர் ஆனதால் அந்த இடம் வெறிச்சோடியதால் தான் பயப்படுவதாக பிரியங்கா ரெட்டி தனது சகோதரியிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குள்ளாகவே பிரியங்காவின் தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது. சகோதரிக்கு தொலைபேசி வந்த அரை மணிநேரத்திற்குப் பிறகு காவல்துறையினரைப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அணுகியிருந்தனர்.

இதுகுறித்து சைபராபாத் காவல் ஆணையாளர் வி.சி.சஜ்ஜனர் கூறியதாவது:

”கடந்த நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் காணாமல் போன பெண் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை அன்றிரவு காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் தாமதப்படுத்தியதாக விரிவான விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சைபராபாத் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் காவல் நிலையத்தில் தீவிரமான சூழ்நிலைகள் சார்ந்த குற்றங்கள் தொடர்பான புகார் வரும்போதெல்லாம் அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் வழக்குகளைப் பதிவு செய்யுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இரவு 11 மணியளவில் தங்கள் பெண் காணாமல் போன புகாரை அளிக்க காவல்துறையினரை அணுகியபோது அவர்கள் விரைவாக பதிலளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். புகார் அளிக்க வந்தவர்களிடம் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர். புகாரைத் தட்டிக் கழிக்கும் நோக்கத்தில் இரண்டு காவல் நிலையங்களுக்கிடையிலான அதிகார வரம்பு தொடர்பாக காவல்துறையினர் அதிக நேரத்தை வீணடித்ததாக அவர்கள் கூறினர். இதனால் அப்போது பணியில் பொறுப்பில் இருந்த மூன்று போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் (ஆர்ஜிஐஏ) காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் எம்.ரவி குமார், சம்ஷாபாத் காவல் நிலையத்தின் இரு தலைமை கான்ஸ்டபிள்கள் பி.வேணு கோபால் ரெட்டி மற்றும் ஏ. சத்தியநாராயணா கவுட் ஆகியோர் தங்கள் கடமையிலிருந்து தவறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு சைபராபாத் காவல் ஆணையாளர் வி.சி.சஜ்ஜனர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here