சுரினாம் ஜனாதிபதிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை!


அரசியல் எதிரிகளை தூக்கில் போட்ட சுரினாம் நாட்டின் ஜனாதிபதிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தென்னமெரிக்க நாடான சுரினாம் நாட்டில் ஜனாதிபதியாக இருந்து வருபவர், டேசி பூட்டர்ஸ் (74). இவர் 1980களில் சர்வாதிகாரியாக இருந்தபோது 15 அரசியல் எதிரிகளை தூக்கில் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது டிசம்பர் படுகொலைகள் என அழைக்கப்படுகிறது.

பூட்டர்ஸ் 1980 களில் இராணுவ அரசாங்கத்தின் தலைவராக சுரினாமிற்கு தலைமை தாங்கினார்.

ஜனநாயகத் தேர்தலைத் தொடர்ந்து 2010 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற அவர், 2015 ல் மற்றொரு முறை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக அவர் மீது அந்த நாட்டின் இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சிந்தியா வால்ஸ்டீன் மாண்டர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் டேசி பூட்டர்ஸ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருதினர்.

இதையடுத்து ஜனாதிபதி டேசி பூட்டர்சுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தனர். தற்போது இவர் அரசு முறை சுற்றுப்பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். தனக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனாலும் அவர் நாடு திரும்பிய உடன் தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது சட்டத்தரணி இர்வின் கன்ஹாய் அறிவித்துள்ளார்.

சுரினாம் நாட்டின் சட்டப்படி அனைத்து விதமான மேல்முறையீடுகளையும் செய்து முடிக்கிற வரையில் தண்டிக்கப்பட்ட ஒருவரை கைது செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here