ரொனால்டோவின் அபாரமான 4-ம் நிமிட கோலினால் போர்த்துக்கல் வெற்றி

அருமையான கால்பந்தாட்டத்தை மொராக்கோ ஆடினாலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 4வது நிமிட வியத்தகு கோலினால் போர்த்துக்கலுக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் 1-0 என்று தோற்று இறுதி 16 சுற்றுத் தகுதி வாய்ப்பை இழந்தது.

அன்று ஈரானுக்கு எதிராக செல்ஃப் கோல் அடித்ததால் அதுவரை அருமையாக ஆடிய, மொராக்கோ துரதிர்ஷ்டவசமாக தோற்றதோடு, நேற்று போர்த்துகலுக்கு எதிராக குறைகூற முடியாத ஒரு உயர்தர கால்பந்தாட்டத்தை வெளிப்படுத்தியது மொராக்கோ.

ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த உலகக்கோப்பையில் ஒரு முடிவுடன் இறங்கியுள்ளார் என்பது திட்டவட்டம். அவர் என்ன செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அதை இரண்டு போட்டிகளாகச் செய்து, இந்த உலகக்கோப்பையில் 4வது கோலை 2வது போட்டியில் அடித்தார்.

மொராக்கோ அணியின் ஆட்ட உத்தி அபாரமாக இருந்தது. 2வது பாதியில் ஹக்கிம் ஜியாச், நூரிதின் அம்ராபட் ஆகிய நடுக்கள வீரர்கள் எளிதில் நிறைய இடைவெளிகளைக் கண்டு பிடித்தனர். ஆனால் இரண்டாவது பாதியில் கிடைத்த கோல் வாய்ப்புகளைத் தவற விட்டனர். தொடக்க நிமிடத்திலேயே பந்தை அம்ராபட் வலது புறம் வேகமாக எடுத்துச் சென்று ஒரு அருமையான ‘கிராஸ்’ செய்தார். இதனை ஜியெச் மீட்டெடுத்தார், பிறகு பந்தை உள்வட்டத்துக்குள் அடித்தார். ஃபாண்ட்டுக்கு முன்னால் சென்ற பூவ்டைப் 10 அடியிலிருந்து ஒரு முயற்சி செய்தார். ஆனால் பாருக்கு மேல் சென்றது, பிரகாசமான தொடக்கமாக அமைந்தது மொராக்கோவுக்கு.

போர்த்துகல் தன் வழக்கமான எதிர்த்தாக்குதலை தொடுக்க 3வது நிமிடத்தில் சில்வா வலது புறம் சென்று ஒரு கிராஸ் செய்ய பந்து வெளியே செல்ல கோர்னர் வாய்ப்பு கிடைத்தது. சிலவாவே கோர்னர் அடித்தார். அது தலையால் முட்டி அப்புறப்படுத்தப்பட்டது, உடனே ரஃபேல் பந்தை கொஞ்சம் தூரத்திலிருந்து கோலுக்குள் அடிக்க முயன்றார், ஆனால் டா கோஸ்டா தலையால் வெளியே அடிக்க இன்னொரு கார்னர்.

இதுதான் தீர்மானகரமான அந்தக் கணமானது, சில்வா ஷோர்ட் கோர்னரை மூட்டின்ஹோவுக்கு அடித்தார், அங்கு 6 அடிக்குள் அவர் பந்தை அடிக்க அங்கு நின்று கொண்டிருந்த ரொனால்டோ டைவ் அடித்து தலையால் முட்டி வலைக்குள் தள்ளியது அப்போது வெற்றி கோல்தான் என்பது ஒருவரும் அறியாததே.

ஒரே உலகக்கோப்பையில் அதிக கோல்களை அடித்த சாதனைக்குரியவர் பிரான்ஸ் வீரர் ஜஸ்ட் ஃபோண்டெய்ன் 1958 உலகக்கோப்பையில் 13 கோல்களை அடித்து உலகச் சாதனையை தன் வசம் வைத்துள்ளார். ரொனல்டோ போல்தான் அவரும் முதல் போட்டியில் ஹட்ரிக்குடன் தொடங்கி அடுத்த போட்டியில் 2 கோல்களை அடித்தார் ரொனால்டோ இந்தச் சாதனையை குறிவைத்திருக்கிறாரா என்பது போகப்போகத் தெரியும்.

9வது நிமிடத்தில் போர்த்துகல் மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுக்க பந்து ரொனால்டோவுக்கு வந்தது பொக்சிற்குள் வலது புறத்திலிருந்து ஷொட்டுக்குத் தயாரானார் ரொனால்டோ 14 அடியிலிருந்து அடித்தது வைடாகச் சென்றது.

12வது நிமிடத்தில் கோர்னர் வாய்ப்பு பெற மொராக்கோவின் ஜியேச் பந்தை அடிக்க, மார்க்கரிடமிருந்து விடுபட்ட டி கோஸ்டா பலமாக தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த முயல போர்த்துகல் கோல்கீப்பர் பாட்ரிசியோ அதனைத் தடுத்து விட்டார். இது ஒரு அருமையான முயற்சி. போர்த்துகல் அதிர்ந்தது. காரணம் கோஸ்டா போர்த்துகல் அணிக்காக ஆட வேண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

18வது நிமிடத்திலும் மொராக்கோ தாக்குதல் மூவ் ஒன்றை செய்தது. நடுக்களத்தில் போர்த்துகல் அணியிடமிருந்து பந்தை பறித்த மொராக்கோ விரைவில் பந்தை போர்த்துகல் கோலை நோக்கி நகர்த்தியது. அம்ப்ராபட் பந்தை திராரிடம் தள்ள அவர் ரைட் பேக்கிலிருந்து பந்தை முன்னால் வந்து எடுத்து வேகமாக முன்னேறினார். பிறகு தாழ்வாக ஒரு பாஸை கோலுக்கு 6 அடி முன்னால் இருந்த வீரரிடம் பந்தை பாஸ் செய்ய போர்த்துகல் பந்தை வெளியேற்றியது. ஆனால் மொராக்கோ விடாப்பிடியாக இருப்பதை போர்த்துகல் உணர்ந்தது. 23வது நிமிடத்தில் ஜியேச் மீண்டும் 25 அடியிலிருந்து மிகச்சரியாக அடிக்க கோல் கீப்பர் பேட்ர்சியோ சரியாகப் பார்த்துக் கொண்டேயிருந்து கோலாகாமல் தடுத்தார்.

மீண்டும் நடுவர் பிழை, மொராக்கோவுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பெனால்டி மறுப்பு:

26வது நிமிடத்தில் அம்ராபட் ஒரு லோங் பாஸை எடுத்து ராஃபேல் கிரைரோவைத் தாண்டி எடுத்துச் சென்று போர்த்துகல் பொக்சிற்குள் சென்றார். ஆனால் கிரைரோ அவருக்குக் கடும் நெருக்கடி கொடுக்க கீழே விழுந்தார். மொராக்கோ அணி பெனால்டி கிக் எதிர்பார்த்தது. மீண்டுமொரு தருணம் வீடியோ ரெஃபரலைப் பயன்படுத்தாமல் ஆட்டம் கடந்து சென்றது.

ரீப்ளேயில் போர்த்துகல் வீரர் கிரைரோ, மொராக்கோவின் அம்ராபட்டின் சட்டையைப் பிடித்து கடுமையாக இழுத்தது தெரிந்தது. ஆனால் அம்ராபட்டும் கிரைரோவின் கால்சட்டையைப் பற்றியதும் தெரிந்தது.

மொராக்கோ வீரர் அம்ராபட்டை கீழே தள்ளிய போர்ச்சுகலின் கிரைரோ. பெனால்டி கிடைக்கவில்லை

32வது நிமிடத்தில் ரொனால்டோவுக்கு சற்று அருகில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. அனைவரும் ஆர்வமுடன் பார்க்க அதனை ரொனால்டோ வீரர்கள் சுவரில் அடித்தார். பயனில்லை. 39வது நிமிடத்தில் ரொனால்டோவிடம் மொராக்கோ கோல் வலைக்கு அருகே பந்து வந்தது ரொனால்டோ மார்பில் பந்தை வாங்கி கட்டுப்படுத்தி குயேடேஸுக்கு லேசாகத் தூக்கி விட குயேடேஸ் கோலாக மாற்ற முடியவில்லை. கோல் கீப்பர் பந்தை தட்டி விட்டார்.

42வது நிமிடத்தில் மொராக்கோ மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்து வலது புறம் ஊடுருவ பந்தை அடிக்கப்பார்த்தால் பொக்ஸ் அருகே வீரர் இல்லை. 45வது நிமிடத்திலும் மொராக்கோவின் ஜியேச் ஃப்ரீ கிக் அருமையாக கோல் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது, ஆனால் கோலாக மாற்ற முடியவில்லை. இடைவேளை வந்தது போர்த்துகல் 1-0 என்று முன்னிலை பெற்றாலும் மொராக்கோவின் நுட்பமான கால்பந்தாட்டத்தில் கொஞ்சம் நிம்மதியின்றிதான் ஓய்வறைக்கு வந்தனர்.

இடைவேளைக்குப் பிறகும் மொராக்கோ அச்சுறுத்தல் தொடர்ந்தது, ஒரு முறை யூனஸ் பெல்ஹாண்டாவின் தலையால் அடித்த ஷொட் ஒன்றை போர்த்துகல்லின் ருய் பேட்ரிசியோ வெற்றிகரமாகத் தடுத்தார். அதே போல் இருமுறை பெனாடியா போர்த்துகல் பகுதிக்குள் நுழைந்து ஆட்டினார், ஆனால் ஷொட் வைடாகச் சென்றது, ஒருமுறை மீண்டும் ஜியேச் உள்ளே நுழைந்து அடிக்க பெபே அவரது ஷொட்டை திருப்பி விட்டார் பந்து கோல் போஸ்டுக்கு மேல் சென்றது.

கடைசி வரை 2வது கோலை போர்த்துகல்லால் அடிக்க முடியவில்லை, மொராக்கோ மிக அருமையான கால்பந்தாட்டத்தை ஆடினாலும் சமன் செய்ய முடியவில்லை. ஒரு நல்ல அணி இறுதி 16 வாய்ப்பை இழந்து விட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here