எகிப்து அணியை வீழ்த்தியது ரஷ்யா: 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் போட்டியை நடத்தும் ரஷ்ய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் எகிப்து அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ரஷ்யா – எகிப்து அணிகள் மோதின. தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ள ரஷ்யா 4-2-3-1 என்ற போர்மட்டில் களமிறங்கியது. அதேவேளையில் 45-வது இடத்தில் உள்ள எகிப்து அணியும் 4-2-3-1 என்ற போர்மட்டிலேயே களம்புகுந்தது. சுமார் 14 நிமிடங்கள் வரை ரஷ்யா ஆதிக்கம் செலுத்தியது.

5-வது நிமிடத்தில் ரஷ்யாவின் ரோமன் ஸோபின் பொக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து தடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அலெக்ஸாண்டர் சாமடோவின் கிராஸை பொக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டியவாறு செர்ஜி இக்னாஷேவிச் கோல் வலைக்குள் தள்ள முயற்சி செய்தார். ஆனால் அதுவும் தடுக்கப்பட்டது.

அலெக்ஸாண்டர் கோலோவின் பொக்ஸின் வெளியே இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மிகநெருக்கமாக இடது புறம் சென்று ஏமாற்றம் அளித்தது. 13-வது நிமிடத்தில் அலெக்சாண்டர் சோமடோவ் உதவியுடன் டெனிஸ் செரிஷேவ் அடித்த பந்தும் தடுக்கப்பட்டது. 15-வது நிமிடத்தில் எகிப்தின் மர்வான் மொஹ்சன், பொக்ஸின் இடது புறத்தில் 18 அடி தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து தடுக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் அப்துல்லாவின் உதவியுடன் டிரீஸ்கட், பொக்ஸின் இடது ஓரத்தில் இருந்து அடித்த பந்து, கோல்கம்பத்துக்கு வலது புறமாக வெளியே சென்றது.

25-வது நிமிடத்தில் முகமது சாலாவிடம் இருந்து பந்தை பெற்ற டிரீஸ்கட், பொக்ஸின் வெளியே இருந்து அடித்த போது தடுக்கப்பட்டது. 35-வது நிமிடத்தில் மர்வான் மொஹ்சன் தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தின் இடது ஓரத்துக்கு உயரமாக வெளியே சென்றது. 42-வது நிமிடத்தில் முகமது ஷாபி உதவியுடன் பந்தை பெற்ற முகமது சாலா, பொக்ஸின் மையப்பகுதியில் இருந்து தட்டி விட்ட பந்து கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

47-வது நிமிடத்தில் ரஷ்யாவின் கோலோவின் இலக்கை நோக்கி அடித்த பந்தை எகிப்து கோல்கீப்பர் தட்டி விட்டார். திரும்பி வந்த பந்தை ஸோபின் இலக்கை நோக்கி உதைத்தார். அப்போது ஸூபாவுக்கு முன்புறமாக நின்ற எகிப்து அணியின் கப்டன் அகமது பாத்தி பந்தை தடுக்க முயன்றபோது அவரது மூட்டு பகுதியில் பட்டு கோலாக மாறியது. இந்த உலகக் கோப்பை தொடரில் இது 5-வது ஓன் கோலாக அமைந்தது. முகமது பாத்தியின் ஓன் கோலால் ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றதுடன் அந்த அணியின் நம்பிக்கை அதிகரித்தது.

56-வது நிமிடத்தில் முகமது சாலா பொக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து தடுக்கப்பட்டது. 59-வது நிமிடத்தில் ரஷ்யா 2-வது கோலை அடித்தது. சமடோவ் பந்தை மரியோ பெர்னான்டஸூக்கு தட்டி விட அவர் எதிரணி டிபன்டரை லாவகமாக ஏமாற்றி டெனிஸ் செரிஷேவுக்கு பந்தை அனுப்பினார். அவர், எகிப்து அணியின் இரு டிபன்டர்கள் முன்னிலையில் அற்புதமாக கோலாக மாற்றினார். அடுத்த 3-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்து ரஷ்ய அணி எகிப்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. வெகுதூரத்தில் இருந்த இலியா குட்போவ் உயரமாக அடித்த பந்தை, பொக்ஸ் பகுதிக்கு அருகில் வைத்து நெஞ்சால் கட்டுப்படுத்திய ஸூபா, எகிப்து அணியின் டிபன்டர் அகமது ஹெக்ஸியின் வலுவில்லாத தடுப்பை மீறி கோல் அடித்து அசத்தினார். இதனால் ரஷ்ய அணி 3-0 என்ற வலுவான நிலையை எட்டியது.

72-வது நிமிடத்தில் முகமது சாலா, பெனால்டி பகுதிக்குள் எதிரணியினரால் பவுல் செயப்பட்டார். இதனால் எகிப்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி முகமது சாலா கோல் அடித்தார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. கடைசி கட்டங்களில் முகமது சாலா, வார்டா, தாரேக் அகமது ஆகியோரது கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் இல்லாமல் போனது. முடிவில் ரஷ்ய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வீழ்த்தியிருந்து. இரு ஆட்டங்களையும் சேர்த்து 8 கோல்கள் அடித்துள்ள ரஷ்ய அணி 6 புள்ளிகளை பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.

ரஷ்ய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 25-ம் தேதி உருகுவே அணியை சந்திக்கிறது. அதேநாளில் எகிப்து, சவுதி அரேபியாவுடன் மோதுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here