ராகுல் காந்தியை கமல் சந்திப்பு ஏன்?

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டி வரும் அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

முன்ன தாக கட்சியை முறைப்படி பதிவு செய்ய டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அழைப்பின் பேரில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கமல்ஹாசன் நேற்று சென்றார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “கமல்ஹாசனுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளைப் பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் நாங்கள் விரிவாக ஆலோசித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தெரியாமலேயே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் வீட்டிற்கு கமல்ஹாசன் வரும் வரை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு விவரம் தெரியவில்லை. இந்த சந்திப்பு இரு கட்சிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘‘தமிழகத்தில் தனது கட்சியை வலிமைபடுத்தும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கியுள்ளார்.

இந்த நேரத்தில் காங்கிரஸிடம் இருந்து அவர் பயனடைய முடியும். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளபோதிலும், எங்கள் கதவை நாங்கள் திறந்தே வைத்துள்ளோம். மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பிரச்சினை எழுந்தால் வேறு சில சிறிய கட்சிகளை இணைத்து நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அப்போது கமல்ஹாசன் ஒரு வாய்ப்பாக இருக்கூடும்’’ எனக் கூறினார்.

கமல்ஹாசன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here