மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய குரங்கை மீட்டு வளர்க்கும் பெண் காவலர்

கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை மீட்ட பெண் காவலர் அதற்கு உரிய சிகிச்சை அளித்து, தனது வீட்டில் குழந்தையைப் போல வளர்த்து வருகிறார்.

கர்நாடகாவில் உள்ள குல்பர்கா நகர காவல்நிலையத்தில் துணை உதவி காவல் ஆய்வாளராக இருப்பவர் யசோதா. கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லம்மா கோயில் அருகில் இவர் சென்றுகொண்டிருந்த போது மின் கம்பத்தில் குரங்கு ஒன்று விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அந்த குரங்கு கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

இதனைக் கண்ட பொதுமக்கள், அச்சத்தின் காரணமாக‌ யாரும் அருகில் சென்று உதவவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை உதவி காவல் ஆய்வாளர் யசோதா தைரியமாக அருகில் சென்று குரங்கை மீட்டுள்ளார். உடனடியாக தனது வீட்டுக்கு தூக்கி சென்று குரங்கிற்கு முதலுதவி செய்திருக்கிறார். பின்னர் குல்பர்கா கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, குரங்கிற்கு உரிய சிகிச்சை வழங்கினார்.

தற்போது முழுவதும் குணமடைந்த குரங்கை யசோதா தனது வீட்டில் வைத்து, குழந்தையைப் போல வளர்த்து வருகிறார். இது குறித்து தனது ஃபேஸ்புக்கில் குரங்கு படத்துடன் அவர் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. ஏராளமானோர் காயமடைந்த குரங்கை குழந்தைப் போல நேசிக்கும் பெண் காவலரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து யசோதா கூறுகையில், “குரங்கை முதல்முறையாக பார்க்கும் போது எனக்கும் பயமாக இருந்தது. இருப்பினும் அது அடிபட்டு துடிக்கும் போது என்னால் வேடிக்கை பார்க்க முடியவில்லை. அதன் உயிரைக் காப்பாற்றியதால் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறது. குரங்கு என்பதை மறந்து அதற்கு ‘மஞ்சு’ என பெயர்சூட்டி குழந்தையைப் போல எனது வீட்டிலே வளர்த்து வருகிறேன்” என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here