சம்பந்தன்- விக்னேஸ்வரன்- சுமந்திரன் இரகசிய சந்திப்பு: விக்கியை நோக்கி நகரும் தமிழரசுக்கட்சி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழரசுக்கட்சி குழப்பமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. மீண்டும் விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் அதை உத்தரவாதப்படுத்த முடியாது.

விக்னேஸ்வரனை தவிர்த்து, வடமாகாணசபை கைப்பற்றுவது மிக கடினமானதென்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களும் இருக்கிறார்கள். கடந்த ஓருசில வாரங்களில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம் இது.

வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் திட்டம் குறித்தும் தமிழ்பக்கம் இரண்டு தினங்களின் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் பத்திநாதனை வேட்பாளராக்கினால், தமிழரசுக்கட்சி உடைவை சந்திக்கும் என்ற செய்தி கூட்டமைப்பின் தலைமைக்கு, சில செயல்பூர்வமாக நகர்வுகளின் மூலம், சில தரப்பினரால் காட்டப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ஒன்று சேர்ந்து, பத்திநாதனை எதிர்ப்பதென முடிவெடுத்துள்ளனர். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும், எட்டு மாகாணசபை உறுப்பினர்களும் ஒன்றுகூடி இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர். மாவை சேனாதிராசாவை தவிர்த்து, தமிழரசுக்கட்சி வேறு ஒரு வேட்பாளரை களமிறக்கினால், இந்த அணி விக்னேஸ்வரனை நோக்கி போவதென கொள்கையளவில் முடிவு செய்துள்ளது.  இதற்கு மேல் இதுபற்றி இப்போதைக்கு வேறு தகவல் எதையும் குறிப்பிடவில்லை. சமயம் வரும்போது இதன் பின்னணியை வெளியிடுகிறோம்.

இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்குமிடையில் நேரடிப்பேச்சு நடைபெறவுள்ளது. கொள்கையளவில் இந்த பேச்சிற்கு இரண்டு தரப்பும் இணங்கியுள்ளதை தமிழ் பக்கம் அறிந்துள்ளது.

வரும் 24ம் திகதி முதலமைச்சரின் புத்தக வெளியீட்டிற்காக இரா.சம்பந்தன் யாழ்ப்பாணம் வரவிருக்கிறார். அப்போதோ அல்லது அதற்கு சமீபமான நாட்களிலோ இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

சந்தித்து பேசுவதென்ற இணக்கப்பாட்டை மின்அஞ்சல் மூலம் இரண்டு தரப்பும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்த சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொள்வார்.

முதலமைச்சரின் புத்தக வெளியீட்டு சமயத்தில் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதை இன்று காலை வரை தமிழ்பக்கத்தால் உறுதிசெய்ய முடியவில்லை. 24ம் திகதி காலையும், மாலையும் கொழும்பில் இரண்டு நிகழ்வுகளில் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொள்ளவிருக்கிறார். அந்த நிகழ்வுகளை இரத்து செய்து யாழ்ப்பாணத்திற்கு சுமந்திரன் வரும் பட்சத்தில் சந்திப்பிற்கான வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, முதலமைச்சரின் புத்தக வெளியீட்டிற்கு செல்வதில்லையென தமிழரசுக்கட்சியின் எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் முன்னர் முடிவெடுத்திருந்தனர். இரா.சம்பந்தன் கலந்துகொண்டாலும், நிகழ்வை புறக்கணிக்க திட்டமிட்டிருந்தனர். எனினும், அவர்களை நிகழ்வில் கலந்துகொள்ள வைக்கும் முடிவை தலைமை எடுத்துள்ளது. எனினும், நேரடி உத்தரவாக அல்லாமல், தலைமைக்கு நெருக்கமான உறுப்பினர்கள் மூலம்- அனைவரையும் நிகழ்விற்கு அழைத்து செல்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here