வவுனியா பொதுவைத்தியசாலை பதில் பணிப்பாளரிற்கு விரைவில் இடமாற்றம்!

வவுனியா பொது வைத்தியசாலை பதில் பணிப்பாளர் கு.அகிலேந்திரனுக்கு விரைவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. முறையற்ற விடுப்பில் வெளிநாடு சென்ற விவகாரத்திலேயே பதில் பணிப்பாளர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.

வவுனியா பொதுவைத்தியசாலை பதில் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், அதே வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக பணிபுரியும் அவரது மனைவி ஆகியோர் அண்மையில் மலேசியாவிற்கு சென்று வந்திருந்தனர்.

இது குறித்த முறைப்பாடுகள் சுகாதார திணைக்களத்திற்கு சென்றிருந்தது. எனினும், சுகாதார திணைக்களம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தது. எனினும், வடக்கு ஆளுனரின் கவனத்திற்கு விடயம் சென்றதையடுத்து, ஆளுனரின் விசேட உத்தரவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த தகவலை தமிழ் பக்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

இந்த விசாரணையின்போது, முறைப்படி அனுமதி பெறாமல் வெளிநாட்டுக்கு சென்று வந்த குற்றச்சாட்டை பதில் பணிப்பாளர் மறுத்திருந்தார். எனினும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக அவர் வெளிநாடு சென்று வந்த விடயம் உறுதிசெய்யப்பட்டது.

ஏற்கனவே அவர் மீது சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. வவுனியா வைத்தியசாலைக்கு சொந்தமான கழிவகற்றும் பவுசரை வீட்டு தேவைக்கா பயன்படுத்தியது, வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியில் மனைவியை அநுராதபுரத்திற்கு மேலதிக கற்கைக்கு அனுப்பி வைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே சுமத்தப்பட்டு வந்திருந்தது. எனினும், அப்போதைய சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் இந்த விசாரணைகளை மூடிமறைத்து, பதில் பணிப்பாளரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி வந்திருந்தார்.

ஆளுனரே நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்தப்பட்டதில், பதில் பணிப்பாளர் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்று வந்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் வாரத்திற்குள் அவருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டுவிடும் என தமிழ்பக்கத்திற்கு நம்பகரமாக அறிய கிடைத்துள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here