அபிவிருத்தி முக்கியம்தான்; ஆனால் தனித்துவத்தை சிதைக்காமல் இருக்க வேண்டும்: முதலமைச்சர்!

மண்டைதீவு-அல்லைப்பிட்டி இடையே புதிதாக அமைக்கப்பட்ட தொடுப்புப் பாலம் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனால் இன்று புதன்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

ஆயிரம் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் 32 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முதலமைச்சர், பாலத்தை நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன் பெயர்ப் பலகையையும் திரை நீக்கம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரட்னம், பா. கஜதீபன், ஆர்.ஜெயசேகரம் மற்றும் மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், மதகுருமார்கள், பொதுமக்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள 7 பெருந்தீவுகளும் வரலாற்று ரீதியாக மிக்க முக்கியத்துவம் வாய்ந்தன. அவற்றுள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு பகுதிகள் தற்போது தரைமார்க்கமாக பயணம் செய்யக்கூடிய வகையில் யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் வீதி அமைக்கப்பட்டுள்ள போதிலும் தீவுகளுக்கிடையேயான உள் இணைப்புக்கள் இல்லாத நிலையில் மண்டைதீவில் இருந்து அல்லைப்பிட்டிப் பகுதிக்கு செல்வதற்கோ அல்லது அல்லைப்பிட்டியில் இருந்து மண்டைதீவில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்திற்கு செல்வதற்கோ சுற்றுவழி மார்க்கத்தையே பயன்படுத்த வேண்டியிருந்தது.

இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு மண்டைதீவையும் அல்லைப்பிட்டியையும் இணைக்கும் 4.8மஅ நீளமான வீதியையும் 20 மீற்றர் பாலத்தையும் புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிராமிய பாலங்கள் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 20 மீற்றர் நீளமான இப் புதிய பாலம் நவீன முறையில் 32 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படுகின்ற போதும் இதன் இருமருங்கிலும் காணப்படுகின்ற வீதிகள் புனரமைப்புச் செய்யப்படாமையால் இந்த பாலத்தின் பாவனை முழுமையாக இப்பகுதி மக்களுக்கு கிடைப்பதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இப் பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தைத் தொடர்ந்து மண்டைதீவு பகுதியில் இருந்தும் ஏனைய தீவுகளில் இருந்தும் பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் எஞ்சியிருப்பவர்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக வசதிகள் குறைந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம் மக்களின் முன்னேற்றத்திற்கு இவ் இணைப்புப் பாலம் மிகவும் உதவியாக இருக்குமென எண்ணுகின்றேன். வழக்கமான போக்குவரத்துக்கு மேலதிகமாக சிறிய அளவிலான கைத்தொழில் முயற்சிகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், பனைவளம் ஆகியன இப்பகுதிகளில் காணப்படுவதால் அவற்றைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கும் கைத்தொழில் முயற்சிகளை விருத்தி செய்வதற்கும் இக் கரையோர இணைப்புப் பாதை பெரிதும் உதவும்.

புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் இரு மருங்கிலும் காணப்படுகின்ற வீதிகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி ஏற்பாட்டின்கீழ் வீதிகள் முழுவதும் கொங்கிறீற் இடும் முறையில் புனரமைப்பு செய்யப்படவிருக்கின்றன. அதற்கான மதிப்பீடுகள் கோரப்பட்டு அவை மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனையில் இப்போது உள்ளதாக அறியப்படுகின்றது. இக் குழுவின் அறிக்கை இன்னும் இரு வாரங்களில் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஒப்பந்தகாரர்களின் தெரிவின் பின்னர் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஒரு வங்கிக் கடன் ஒப்பந்த புதிய முறையின் கீழ் உயர்தாக்க செயற்றிட்ட (High Impact Project) முறையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றது. இதற்கான நிதியை ஒப்பந்தகாரர் வங்கியினூடாக ஒழுங்கு செய்து கொண்டு வேலைகளை ஆரம்பிப்பார். வங்கியின் கடனை நல்லிணக்க அமைச்சு காலத்துக்குக் காலம் தீர்க்கும். இப்புதிய முறையிலேயே இது நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றது.
எது எப்படியோ இந்த வேலைகள் விரைந்து முடிக்கப்படவேண்டும் என்பதே எமது அவா.

இன்றைய சூழ்நிலையில் எமது மக்களின் வாழ்வாதார அபிவிருத்திப் பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படவேண்டியவை என்பதில் எமக்கு எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால் அப் பணிகள் எமது நீண்ட கால நலனை மனதில் வைத்து எவ்வாறு, யாரால் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. மண்டைதீவு பகுதியில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் பலரும் தமது திட்ட முன்மொழிவுகளைக் கையளிக்கின்றார்கள். இவர்களின் திட்டங்கள் பாரிய திட்டங்களாக மண்டைதீவு நிலப்பரப்பு முழுவதையும் விழுங்கக்கூடிய வகையாகவோ அல்லது இப்பகுதியின் தனித்துவத்தை சீர்குலைக்கக்கூடியவகையிலோ அல்லது மாகாணத்திற்கு வெளியில் இருப்பவர்கள் இங்கு வந்து பொருளாதார ஆக்கிரமிப்பில் ஈடுபடும் விதத்திலோ அமைந்துவிடக்கூடாது என்பதாலேயே அவ்வாறான கோரிக்கைகளை எடுத்த எடுப்பிலேயே நாம் அனுமதித்துவிடாது அதற்கான நிபுணத்துவக் குழுக்களிடம் கையளித்திருக்கின்றோம்.

அந்த நிபுணர்களைக் கூடத் தம் வலையில் மாட்டி வைக்க முனையும் முதலாதிக்கம் பெற்ற முதலைகள் பற்றி நாம் அறிந்தே இருக்கின்றோம்.

எனவே இப்பகுதிகளின் தனித்துவமும் இயல்பான தன்மையும் அழிந்து விடாத வகையில் இடம்பெறக்கூடிய அபிவிருத்திக்கான திட்டங்களையே கருத்திற் கொண்டு வருகின்றோம். இப் பகுதிகளில் காணப்படுகின்ற கடல் வளங்கள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். அவை உள்ளூர் மக்களுக்கேநன்மை அளிக்க வேண்டும்.விவசாய நிலங்களின் உற்பத்திகளும் அதிகரிக்கப்பட வேண்டும். மண்டைதீவு தெங்குப் பயிர்ச்செய்கைக்கு மிகவும் உகந்த இடம். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே இப்பகுதிகள் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. அதேபோன்று அல்லைப்பிட்டிப் பகுதி நிறைந்த பனைவளங்களைக் கொண்ட ஒரு பகுதி. சுமார் 50 வருடங்களுக்கு முன்பே இப்பகுதி பனம் பொருள் உற்பத்திகளில் தன்னிறைவு காணப்பட்ட இடமாக விளங்கியது.

இவற்றின் தனித்துவங்கள் பேணப்பட வேண்டும்என்று நாங்கள் எண்ணுவதில் பிழையில்லை என்று எண்ணுகின்றேன். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் அமைதியான வாழ்க்கையையும் அமைதியான சூழலையும் பறிகொடுத்த எத்தனையோ நாடுகளைப் பார்த்தவன் நான். பணமே பரமன் என்றொழுகும் பலரை சந்தித்தவன். அருமருந்தன்ன எமது வாழ்க்கையையும் சூழலையும் அறியாமையில் உழலும் அசடர்கள் கைவசம் கொடுக்க நாங்கள் தயாரில்லை. எமது பாரம்பரியங்களை அறிந்து வரலாற்றை உணர்ந்து பண்புடன் சீலமுடன் எம்மை அரவணைத்து நடக்கக் கூடிய எமக்குறவான முதலீட்டாளர்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்தப் பணியில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட எங்கள் மக்கள் யாவரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று புதன்கிழமை. மக்கள் சந்திப்பு நாள். எமது அலுவலகத்தில் மக்கள் பலரும் காத்திருப்பார்கள். ஆகவே எனது உரையை இந்த அளவில் நிறைவு செய்து கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.

நன்றி.
வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here