அரசாங்கத்தின் பங்காளிதான் தமிழரசுக்கட்சி: மைத்திரியை எதிர்க்க கொழும்புக்கு போன இரகசியம்!

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் கடந்தவாரம் முல்லைத்தீவில் நட்சத்திர விடுதியில் இடம்பெற்றிருந்தது. இது குறித்த செய்திகளை தமிழ்பக்கம் விபரமாக வெளியிட்டிருந்தது. கூடவே, அந்த நட்சத்திர விடுதியின் படங்களையும் பிரசுரித்திருந்தோம். இதனால் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அதை சொல்வதற்கு முன்னர் வேறொரு விசயத்தை சொல்லிவிடுகிறோம்.

மத்தியகுழு கூட்டத்தின் ஒரு அங்கமாக- தமிழரசுக்கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் தோல்வி பற்றி ஆராய நியமிக்கப்பட்டகுழுவின் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. கட்சியின் கனடா கிளையை சேர்ந்த குகதாசன்தான் குழுவின் தலைவர். அவர்தான் வாசித்தார்.

ஒரு இடத்தில் இப்படி குறிப்பிட்டிருந்தார்- “இன்று இளைஞர்கள் மத்தியில் எமது கட்சிக்கு ஆதரவு இல்லாமல் போய்விட்டது. பலருக்கு கட்சியையே தெரியவில்லை. அரசாங்கத்தின் பங்காளி கட்சியென்றுதான் அவர்கள் எல்லோரும் நினைக்கிறார்கள்“

இதனால்தானோ என்னவோ நேற்று முன்தினம் (18) மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வந்தபோது தமிழரசுக்கட்சி (கூட்டமைப்பின் பங்காளி கடசிகளின் எம்.பிக்களும்) எம்.பிக்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தாங்கள் மைத்திரியின் கூட்டத்தை புறக்கணிப்பதாக இலேசாக செய்தியையும் கசிய விட்டார்கள்.

முல்லைத்தீவில் Resort இல் தமிழரசுக்கட்சி தலைவர்கள்; இந்த வருடத்திற்குள் தீர்வாம்: சிவமோகனிற்கு கட்சி அங்கத்துவம்!

பாராளுமன்ற அமர்வு, கட்சி கூட்டம் என காரணங்களை சொல்லி 16ம் திகதி மாலையே அனைவரும் வடக்கிலிருந்து புறப்பட்டு விட்டனர். “அந்தபக்கம் யாரையுமே காணவில்லையே“ என அரச தலைவர் ஒரு பேச்சுக்கு கேட்டால், “நாங்கள் கொழும்பில் கூட்டத்திற்காக வந்து விட்டோம்“ என பதிலளிக்கவே இந்த சேப்டியான ஏற்பாடு!

ஆனால், பகிஸ்கரிப்பு என்ற செய்தியை ஊடகங்களால் இலேசகாக கசியவும் விட்டார்கள்! எப்படி சாமர்த்தியம்? நோகாமல் நொங்கெடுப்பதென்பது இதைத்தானோ?

சரி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட விசயத்திற்கு வருகிறோம். முல்லைத்தீவு Ocean Park Resort என்ற நட்சத்திர விடுதியில் கலந்துரையாடல் நடந்திருந்தது. நட்சத்திர விடுதியில் கலந்துரையாடல் நடந்திருந்தது என்ற செய்தியுடன், விடுதியின் படங்களையும் வெளியிட்டிருந்தோம்.

இதை பார்த்துவிட்டு, தமிழரசுக்கட்சியின் எதிர்கால தலைமைகளில் ஒருவரென எதிர்பார்க்கப்படுபவர்களில் வன்னிப்பகுதியை சேர்ந்த பிரபலம் ஒருவர் எமக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். ஒரு பொறுப்புணர்வில்லாமல் செய்தி வெளியிட்டதாக காட்டமாக பேசினார்.

அவரது கோபத்தை தணிய வைத்து, விசயத்தை கேட்டோம்.

“நீங்கள் நினைத்தபடி செய்தி போடுகிறீர்கள். ஏதோ நாங்கள் லக்சரி ஹொட்டலில்- நீச்சல்குளத்தை பார்த்தபடி பொழுதுபோக்கியதாக நினைக்கிறீர்களா? அல்லது, மக்களை திசைதிருப்புகிறீர்களா? உண்மையில் அங்கு நடந்ததை கேட்டால் உங்களிற்கே இரத்தக்கண்ணீர் வரும்“ என்றார்.

ஏதோ விசயமிருக்கிறது என்பதை தெரிந்து, சொல்லுங்கள் என்றோம்.

“கூட்டம் நடந்தது லக்சரி ஹொட்டல்தான். ஆனால் நாங்கள் அங்கு பிச்சைக்காரராகத்தான் இருந்தோம். ஒரு சிறிய அறைதான்- கட்டணம் மிக குறைவான இடம்- ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வசதியாக இருக்கவே முடியாமல், பலர் இடித்துப்பிடித்துக் கொண்டிருந்ததாக என்னிடமே முறையிட்டார்கள்.

முல்லைத்தீவு எம்.பி சிவமோகன் கட்சிக்குள் நல்ல பெயர் எடுக்க, தானே கூட்ட ஏற்பாட்டை செய்வதாக தலைமையிடம் கூறிவிட்டு, கஞ்சத்தனம் காட்டினார். தலைமையை மட்டும் கவனித்தால் போதுமென நினைத்தார்.

கூட்டத்தில் பங்குகொண்ட முக்கியஸ்தர்களான எமக்கு நல்ல விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பிரமுகர்களின் வாகன சாரதிகள், உதவியாளர்களிற்கு மிக கீழ் மட்ட உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை வெளியிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். அதிலும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஓரிரண்டு பிரமுகர்களின் உதவியாளர்களை மட்டும், “லக்சரி விருந்திற்கு“ அழைத்தார்கள். மற்றையவர்களை அந்த விருந்தில் கலந்துகொள்ள முடியாதென வாசலிலேயே மறித்து, பார்சல் சாப்பாட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

இந்த இலட்சணத்தில், நீங்கள் இப்படி படங்கள் போடுவது முறையா?“ என கொதித்தார்.

அதானே! நாங்கள்தான் தப்பு பண்ணிவிட்டோமோ?

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here