தமிழ் மக்களிடம் என் மீது வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்களா?: மைத்திரி சீற்றம்!

போரில் பாதிப்பிற்குள்ளானவர்களிற்கு இழப்பீடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடந்த அமைச்சரவை கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேனா நிராகரித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. முன்னாள் விடுதலைப்புலிகளிற்கு உதவிகள் செய்வது, புலிகளை ஆதரிப்பதற்கு சமனானது என மைத்திரி  கூறியதாக பல பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அது தவறானது என்று தெரியவந்துள்ளது.

அந்த செய்தியை பரப்பிய அமைச்சர்களுக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் மைத்திரி செம டோஸ் கொடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு மைத்திரிபால விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி உரையாற்றி, அப்படியொரு முடிவை மைத்திரி எடுத்திருந்தால் அது தவறானது என சுட்டிக்காட்டியிருந்தார். முதலமைச்சர் உரையாற்றிய பின்னர், அது குறித்து வினவிய ஜனாதிபதி- தான் அப்படி சொல்லவில்லையென முதலமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.

அதேசூட்டுடன் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் விளாசி தள்ளியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்தார்.

இழப்பீடுகளை ஒன்றாக அனைவருக்கும் வழங்கும் வகையில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இதன்போதே மைத்திரிபால கடும் தொனியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “இந்த அமைச்சரவை பத்திரம் கடந்தவாரம் சமர்ப்பிக்கப்பட்டபோது நானே நிராகரித்தேன் என கூறியுள்ளீர்கள். இதன்மூலம் தமிழ் மக்களிடம் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சித்துள்ளீர்கள். கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டபோது , நீங்கள்தான் அதனை நிராகரித்தீர்கள். அப்படி செய்துவிட்டு, நான் நிராகரித்ததாக ஊடகங்களிடம் கூறியுள்ளீர்கள்.

தமிழ் ஊடகங்கள் என் மீது கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன. இப்படி செயற்படாமல் துரிதமாக இழப்பீடுகளை வழங்கும் விதத்தில் இந்த அமைச்சரவை பத்திரத்தை ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டும்“ என கூறியுள்ளார்.

கடந்தவாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்னவே, விடுதலைப்புலிகளிற்கு உதவ முடியாதென ஜனாதிபதி நிராகரித்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here