வடக்கு ஆளுனர் பட்டியலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரு சிங்களவரும்!


வடக்கு ஆளுனர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், ஊகமும் பரவலாக நிலவி வருகிறது. எனினும், இன்னும் ஆளுனர் தொடர்பான இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆளுனர் பட்டியலில் இருப்பவர்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உலாவி வருகிறது.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதும், அனைத்து ஆளுனர்களும் பதவிவிலக அறிவுறுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஆறு மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாண ஆளுனர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதில் கிழக்கு ஆளுனராக திஸ்ஸ விதாரண நியமிக்கப்படலாமென தெரிகிறது.

வடக்கு ஆளுனராக யாரை நியமிப்பதென்ற குழப்பம் கோட்டாபய தரப்பிடமும் இருப்பதாக தெரிகிறது. ஆளுனர் பட்டியலில் இருப்பவர்கள் என்ற பெயர்கள் பல வெளியானாலும், அவை பெரும்பாலும் உத்தியோகபூர்வமானவை இல்லை.

இம்முறை இராணுவ ஆளுனர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்பது தெரிகிறது. அதனால் கோட்டாபய தரப்பிற்கு நெருக்கமான முன்னாள் ஆளுனர் சந்திரசிறி நியமிக்கப்பட வாய்ப்பில்லை.

மஹிந்த தரப்புடன் கூட்டணி வைத்த பலரும் வடக்கு ஆளுனர் பதவியை குறிவைத்திருந்தனர். குறிப்பாக வரதராஜ பெருமாள் தேசியப்பட்டியல் ஆசனம் அல்லது வடக்கு முதலமைச்சரை குறிவைத்திருந்தார். அவருக்கு மஹிந்த தரப்புடன் நேரடி தொடர்பு கிடையாது என தெரிகிறது. திஸ்ஸ விதாரண ஊடாக அவர் ஆளுனர் பதவிக்கு முயற்சித்த போதும், அவரது பெயரை கோட்டாபய தரப்பு விரும்பவில்லையென தெரிகிறது. எனினும், ஆளுனர் பதவிக்காக அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அது தவிர அருண் தம்பிமுத்து உள்ளிட்ட சிலரது பெயரும் ஆளுனர் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, வடக்கிற்கு ஒரு சிங்களவர் ஆளுனர் பதவிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் வடக்கிற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டால், வடமத்திய மாகாணத்திற்கு தமிழர் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படலாமென தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here