ஊதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்!


பார்ட்டி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனப் பல நிகழ்வுகளிலும் தவறாமல் இடம்பிடிக்கும் பொருள் பலூன். ‘மன அழுத்தம் தரும் விஷயங்களை பலூனில் எழுதிவைத்து, அதைப் பறக்கவிடுவதன் மூலம் அந்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்’ என்பது மனநல மருத்துவர்களின் கூற்று.

‘மன அழுத்தத்துக்கு மட்டுமல்ல, நுரையீரல் நலனுக்கும் பலூன் ஊதுவது மிகச்சிறந்த பயிற்சி’ என்கின்றனர் நுரையீரல் மருத்துவர்கள். பலூன் ஊதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

சுவாசம் சீராகும்!

உடலில் வயிறு மற்றும் மார்பகத்தைப் பிரிக்கும் குறுக்குத் தசையான உதரவிதானம் (Diaphragm), வயிற்றின் உட்பகுதியான ‘டிரான்ஸ்வெர்ஸ் அப்டொமினிஸ்’ தசை (Transverse Abdominis) ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் நுரையீரலின் செயல்பாடுகள் அமையும். பலூன் ஊதும்போது இரு தசைகளும் வலிமை பெற்று, நுரையீரலின் செயல்பாடுகள் சீராகி, சுவாசப் பிரச்னைகள் தடுக்கப்படும்.

வலி நிவாரணி

பலூன் ஊதுவது தசைகளை வலுப்படுத்தும் என்பதால் தசைப் பிடிப்புகள், மூட்டுவலி உள்ளிட்டவை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமீபத்திய ஓர் ஆய்வில் முதுகுவலிக்கான காரணிகளாக சுவாசப் பிரச்னைகளும் உடல் தோற்றமும் சொல்லப்பட்டிருந்தன. பலூன் ஊதுவதன் மூலம் இந்த இரண்டு பிரச்னைகளும் சரியாகும் என்பதால், முதுகுவலிக்குத் தீர்வு கிடைக்கும்.

உடல் தோற்றம்

பலூன் ஊதும்போது அடிவயிற்றுப் பகுதி தசைகள், உதரவிதானம், டிரான்ஸ் அப்டாமினிஸ் ஆகிய பகுதிகளிலுள்ள தசைகள் அழுத்தத்துக்கு உள்ளாகும். தொடர்ந்து இந்தப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படும்போது அவை வலுப்பெற்று உடலின் தோற்றம் சீராகும்.

நுரையீரல் செயல்திறன் அதிகரிக்கும்!

ஒருவர் சுவாசிக்கும்போது நுரையீரலின் அடிப்பகுதியிலிருக்கும் உதரவிதானம்தான் காற்றை உள்ளிழுப்பதற்குப் பெரும் பங்காற்றும். உதரவிதானத்தின் செயல்திறன் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அதிகளவு காற்று உள்ளிழுக்கப்படும். இது, நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கும். புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு உதரவிதானம் தசை பாதிக்கப்பட்டிருக்கும். பலூன் ஊதுவதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு அவர்கள் எளிமையாகத் தீர்வு காணலாம்.

பலூன் பயிற்சி – ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!
வாழ்க்கைத்தரம் அதிகரிக்கும்!

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலூன் ஊதுவது சிறந்த ‘ஸ்ட்ரெஸ் பஸ்டராக’ அமையும். வாழ்க்கையின் தரத்தை அதிகரிப்பதில் நுரையீரலின் செயல்பாடு, சீரான சுவாசம் ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இவை இரண்டையும் சீராக்க, பலூன் ஊதும் பயிற்சி உதவும். உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு மூச்சிரைக்கும் பிரச்னை ஏற்படலாம். பலூன் பயிற்சி மூச்சிரைக்கும் பிரச்னையைச் சரியாக்கும்.

பலூன் பயிற்சி செய்வது எப்படி?

ஒருவரால் எவ்வளவு நேரம் இயல்பாக பலூனை ஊத முடிகிறதோ, அதுவரை ஊதலாம். மூச்சிரைப்பதுபோல உணர்ந்தால் பலூன் ஊதும் பயிற்சியை நிறுத்திவிடலாம். ஒருவர் ஒரே முறையில் எவ்வளவு வேகமாக பலூன் ஊதுகிறார், பலூன் ஊதும்போது எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து, விடுகிறார், பலூன் ஊதும்போது நுரையீரல் எத்தனை முறை சுருங்கி விரிகிறது என்பன போன்ற விவரங்களைவைத்து ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியம் கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது ‘பல்மொனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) என்ற பரிசோதனை மூலமாக நுரையீரலின் செயல்திறன் கணக்கிடப்படுகிறது. இந்தப் பயிற்சியை தினமும் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here