போராட்டத்தை முடித்துக் கொண்டார் கேஜ்ரிவால்: ஆளுநருடன் மோதல் முடிவுக்கு வந்தது

டெல்லியில் ஆளுநர் வீட்டில் அமர்ந்து 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை முதல்வர் கேஜ்ரிவால் முடித்துக் கொண்டார். ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண ஆளுநர் உத்தரவிட்டதையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

டெல்லியில், கடந்த 3 மாதங்களுக்கு முன் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இதனால் அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் தாங்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி துணை நிலை ஆளுநர் இல்லத்தில் 8 நாட்களாக அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் சில அமைச்சர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் ஆளுநர் வீட்டு வரவேற்பு அறையில் தூங்கி, சாப்பிட்டு, அங்கே கேஜ்ரிவால் நடத்திய போராட்டம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கேஜ்ரிவாலை சந்திக்க சென்றனர்.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, தலைமைச் செயலகம் சென்று ஐஏஎஸ் அதிகாரிகள் அமைச்சர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆளுநர் பைஜால் உத்தர விட்டார். இதை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொள்ள அரவிந்த் கேஜ்ரிவால் முன் வந்துள்ளார். இதன்  மூலம் கடந்த 9 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here