எனக்கு பின் என் மகனை யார் கவனிப்பார்: மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளையைக் கொன்ற தந்தை

தனது மன நலம் பாதிக்கப்பட்ட மகன் மீதுள்ள பாசம் காரணமாக தனக்கு பின்னர் கவனிக்க யாருமே இல்லாமல் போய்விடுவார்களோ என்ற கவலையில் ‘கருணைக்கொலை’ செய்த தந்தை கைதானார்.

கடந்த 10-ம் தேதி திருவொற்றியூரில் அஜாகஸ் மாணிக்கம் நகர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள மழை நீர் கால்வாயில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த இளைஞர் யார் என்று தெரியாத நிலையில் போலீஸார் திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் நோட்டிஸ் ஓட்டினர். அதன் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டனர். இளைஞரை கொலை செய்த மர்ம நபர் யார் என்று போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு வந்த ஒரு நபர் திருவொற்றியூரில் கழுத்தறுப்பட்ட நிலையில் கிடந்த இளைஞரை கொன்றது நான் தான் என்று சரணடைந்தார். அடுத்து அவர் கூறிய தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்டவர் தனது அன்பு மகன் தான் என்று கூறி கதறி அழுதார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரைத்தேற்றி நடந்ததை சொல்லுங்கள், நீங்களே ஏன் உங்கள் மகனை கொன்றீர்கள் என்று கேட்டனர். அப்போது விசாரணையில் அவர் தனது பெயர் நவாசுத்தீன்(49) என்றும், சாதாரண கூலித்தொழிலாளியான தனக்கு திருமணமாகி, 1997-ம் ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்றும் செல்லமாக வளர்த்து வந்த குழந்தை, வளர வளரத்தான் அது மனவளர்ச்சி குன்றிய குழந்தை என தெரிந்து இடிந்து போனதாக தெரிவித்தார்.

நாளாக ஆக தனக்கான எந்த செயலையும் செய்ய முடியாத குழந்தை மனோ நிலையிலேயே தனது ஆண் மகன் வளர்ந்து வருவதை பார்த்து மனம் நொந்து போனதாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியும் இல்லாத நிலையில் மகனை வளர்க்க தான் படாதபாடு பட்டதாகவும், குழந்தைப்போன்ற மனநிலை கொண்ட 21 வயது இளைஞனான மகனை தன்னால் பராமரித்துக்கொண்டும், வேலைக்கும் செல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சாதாரண வாடகை வீட்டில் வசிக்கும் நான் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அவனது தொல்லையால் அக்கம் பக்கத்தில் பிரச்சினை வந்தது. இதனால் மகனை வளர்க்கவும், வருமானத்தை தேட முடியாத நிலையிலும் மிகுந்த மனக்கஷ்டப்பட்ட நான் மகனது நிலையைக்கண்டு வருந்தினேன். இப்போதே இப்படி கஷ்டப்படுகிறானே, எனக்கு எதாவது ஒன்று ஆனால் எனக்கு பின் இவனை யார் கவனிப்பார்கள் என்று மனதுக்குள் அழுதேன்.

பின்னர் மனதை கல்லாக்கிக்கொண்டு இந்த முடிவை எடுத்தேன். மனநலம் பாதிக்கப்பட்டு வாழும் என் மகன் என் முன்னே கஷ்டப்படுகிறான் அதை என்னால் பார்க்க முடியவில்லை, எனக்கு பின்னர் அவன் இதுபோன்று கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவன் வாழ்க்கையில் அவனுக்கு ஒரு நிவாரணம் கிடைக்கட்டும் என்பதற்காக அவனை கருணைக்கொலை செய்ய முடிவெடுத்தேன் என்று அழுதபடி கூறியுள்ளார்.

அப்படி முடிவெடுத்தாலும் உடனே கொல்ல மனம் வரவில்லை. அவனை பார்க்கும் போதெல்லாம் என்னால் கொலை செய்ய மனம் வராது. ஆனாலும் அவன் துன்பப்படுவதை காணச்சகிக்காமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவனை கொன்றுவிட முடிவுச்செய்தேன். அதன்படி ஆடு அறுக்கும் கத்தியால் அவன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கத்தியையும் அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

அதன் பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உன் மகன் எங்கே என்று கேட்டனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் என்று பொய் சொன்னேன், ஆனால் போலீஸார் என் மகன் படத்துடன் போஸ்டரை ஊரெங்கும் ஒட்டியுள்ளதை பார்த்தேன். இதற்கு மேல் தாமதித்தால் சிக்கிக்கொள்வேன் என்று வந்து சரணடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர வளர அவர்கள் செய்யும் குழந்தைத்தனமான சேஷ்டைகளை கட்டுப்படுத்த முடியாது. ஒருபக்கம் ஆத்திரம் வந்தாலும் மறுபக்கம் நமது குழந்தைத்தானே என்று ரத்தக்கண்ணீர் வடித்தப்படி வளர்க்கும் பெற்றோர் இன்றும் இருக்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here