மஹிந்த தென்னம்மட்டையை வைத்தாலும் வாக்களிப்போம்: மைத்திரிக்கு அதிர்ச்சியளித்த பத்துப்பேர்!

மத்திய மாகாண சபையின் பிரதித் தவிசாளர் ஆர்.எம்.எஸ்.பீ.ரத்நாயக்கா தலைமையிலான மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பத்து பேர் இன்றிலிருந்து தாம் பொதுஜன பெரமுன கட்சியை (தாமரை மொட்டு) ஆதரிப்பதுடன் எதிர்காலத்தில் மகிந்த ராஜபக்ஷ அவர்களது வழிகாட்டலுக்கேற்ப இயங்க உள்ளதாகவும் உத்தியோகபூர்வமாக இன்று தெரிவித்துள்ளனர்.

மத்திய மாகாணசபை கட்டிடத் தொகுதியிலுள்ள பிரதித் தவிசாளர் காரியாலயத்தில் நடந்த ஊடக சந்திப்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

மேற்படி ஊடக மகாநாட்டில் பிரதித் தவிசாளர் ஆர்.எம்.எஸ்.பீ.ரத்நாயக்கா, முன்னாள் மாகாண சபை அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னகோன், நிமல் பியதிஸ்ஸ, மற்றும் அங்கத்தவர்களான குணதிலக ராஜபக்ஷ, எம்.ஜி.ஜயசிங்க, கமல் பெலிகொல்ல, வீரசிங்க அலுத்கமகே, டி.ரி.ஜயதிஸ்ஸ, திலக் பண்டார, பராக்கிரம திசாநாயக்கா ஆகிய பத்துப் பேர்கள் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதன்போது பிரதித் தலைவர் ஆர்.எம்.எஸ்.பீ.ரத்நாயக்கா தெரிவித்ததாவது-

நான் 1993ம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கட்சிக்காக பாடுபட்டுவருகிறேன். எனது சகோதரர்களும் அவ்வாறே எமது கட்சியின் வெற்றிக்காகப் பாடுபட்டனர்.

நாம் இன்றும் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியனர்தான். நான் 1999, 204, 2010, 2013 மற்றும் தற்போதைய சபை ஆகிய அனைத்திலும் அங்கத்தவராக இருந்துள்ளேன்.

இன்று மக்களின் எதிர்பார்ப்பு எதுவோ அதனை நிறைவேற்றுவதுதான் எமது கடமை. அந்த வகையில் தற்போது நாடு போகும் போக்கில் மக்களுக்கு திருப்தி இல்லை.

எனவே அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது தலைமையிலான ஆட்சி மலர வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

எனவேதான் நாம் இதன் பிறகு மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எதனை முன்வைக்கிறாரோ அதனை நாம் ஏற்று நடப்போம்.

தற்போதைய மத்திய மாகாணசபையில் ஆயுள் மூன்று மாதங்கள் மட்டுமே. எனவே அதனை அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ முதலமைச்சராக யாரை சிபாரிசு செய்கிறாரோ அவரை நாம் ஏற்று அதன்படி செயல் படுவோம்.

மகிந்த ராஜபக்ஷ ஒரு தென்னம் மட்டையை கொண்டு வந்து நிறுத்தி அதற்கு வாக்களியுங்கள் என்று சொன்னால் அதனையும் செய்யத்தயார் என்றார்.

முன்னாள் மத்திய மாகாண விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்ததாவது-

பெளத்த துறவிகளுக்கு காவி உடைக்குப் பதில் ஜம்பர் என்ற கைதி உடை அணிவிக்கும் ஆட்சியை மாற்ற வேண்டும். இதற்காக ஜனபவுர என்ற வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளோம்.

எதிர் வரும் 29ம் திகதி கண்டி தபால் கேட்போர் கூடத்தில் இது தொடர்பாக கூட்டம் ஒன்று நடத்த உள்ளோம் என்றார்.

முன்னாள் மத்திய மதாகாண விளையாட்டுத் துறை அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்ததாவது-

வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடை பெற உள்ளது. அதில் விருப்பு வாக்கு முறையா? அதற்கும் தயார். தொகுதிவாரியா? அதற்கும் தயார். கலப்பு முறையா? அதற்கும் தயார். எந்த அடிப்படையிலும் நாம் மகிந்த ராஜபக் சார்ந்துள்ள பொதுஜன பெரமுன(தாமரைமொட்டு) கட்சியை வெற்றி பெறச் செய்வோம்.

அடுத்தடுத்து சில மாதங்களில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படப் போகிறது.

பொறுத்திருந்து பாருங்கள். அதுவரை புத்திசாதுரியமாகவும், விவேகமாகவும் சிந்தித்து செயலாற்றுங்கள்.

அரசியல் ரீதியில் நீங்கள் எதிர்பார்த்திரா பல தலைவர்கள் மகிந்த ராஜபக்ஷ உடன் கைகோர்க்க உள்ளனர். அது பற்றி பின்னர் தெரியவரும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here