வரலாறு படைத்த அயர்லாந்து- ஸ்கொட்லாந்து டி20 சர்வதேசப் போட்டி

நெதர்லாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 சர்வதேச போட்டியில் நேற்று முன்தினம் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய போட்டியில் புதிய டி20 வரலாறு நிகழ்ந்தது.

முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணியும் 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்தது, இவ்வகையில் டி20 சர்வதேச கிரிக்கெட் ஒன்று முதன் முதலாக ஸ்கோர்கள் அளவில் சமனிலையில் முடிந்துள்ளது.

அயர்லாந்து அணியின் பால் ஸ்டர்லிங் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 81 ரன்கள் எடுத்து டி20யில் தன் சாதனையையேக் கடந்தார். டெவெண்ட்டரில் நடைபெற்ற இந்தப் போட்டி மொத்தத்தில் 10வது ‘டை’ ஆகும், ஆனால் பொதுவாக டி20களில் சூப்பர் ஓவர் வைத்து முடிவெடுத்து விடுவார்கள். முதன் முதலாக டி20 சர்வதேச போட்டி ஒன்றில் ஆட்டத்தின் முடிவை ‘டை’ என்றே ஏற்றுக் கொண்டு சூப்பர் ஓவர் வழங்கப்படாமல் விடப்பட்டுள்ளது.

கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றிக்குத் தேவை 7 ரன்கள். 5 விக்கெட்டுகள் கையில் உள்ளன. அதிரடி வீரர் கெவின் ஓ ப்ரையன் 28 ரன்களில் களத்தில் இருக்கிறார். ஆனால் ஸ்கொட்லாந்து பவுலர் சஃபியான் ஷெரிப் முதல் பந்திலேயே கெவினோ பிரையனை பெவிலியன் அனுப்பினார். அடுத்த 4 பந்துகளில் 4 ரன்களே வந்தன. ஆகவே கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை. அப்போது ஸ்டூவர்ட் தாம்சன் பந்தை லெக் திசையில் அடித்து 2 ரன்களையே ஓட முடிந்தது, போட்டி வரலாற்று டை ஆனது, அதாவது டை-ஆகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு.

பால் ஸ்டர்லிங் 27 பந்துகளில் அரைசதம் கண்டார், இது அவரது 8வது டி20 சர்வதேச அரைசதமாகும். பிறகு அவர் 81 ரன்களை விளாசினார். இருந்தாலும் கடைசி ஓவரில் 7 ரன்களை தடுத்த ஸ்கொட்லாந்து அணி உண்மையில் ஒரு சிறந்த உறுதியுடைய அணியாகவே இருக்க வேண்டும்.

முன்னதாக முதலில் பேட் செய்த ஸ்கொட்லாந்து அணியில் கொயெட்சர் அதிகபட்சமாக 54 ரன்களை எடுத்தார். முன்சீ, மெக்லியாட் ஆகியோர் தலா 46 ரன்களை எடுத்தனர், கொயெட்சரும், முன்ஸீயும் சேர்ந்து 8 ஓவர்களில் 93 விளாசினர். ஆனால் அதன் பிறகு அயர்லாந்து ஸ்கொட்லாந்து முடக்கியது. 4 விக்கெட்டுகளே விழுந்தாலும் ரன் விகிதத்தை 200க்குக் கொண்டு செல்ல வாய்ப்பிருந்தும் 185-ல் கட்டுப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here